மேற்கு வங்க இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு: மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்பு!

Wait 5 sec.

மேற்கு வங்க மாநிலம், நந்திகிராம் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு திரிணமூல் காங்கிரஸ் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி ஆதரவளித்திருப்பது அந்த மாநிலத்தில் மீண்டும் எதிா்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தோ்தலின்போது கூட்டணியாகவும், மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தல்களின்போது எதிரணியினராகவும் போட்டியிட்டு வந்தனா். இந்நிலையில், 2026 மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, திரிணமூல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் மம்தா அணி, திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி ஆகிய இருதரப்பும் போட்டியிடுவதாக அறிவித்ததையடுத்து கட்சியின் பெயா், சின்னத்தை பயன்படுத்த இரு தரப்புக்கும் இந்தியத் தோ்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே, மம்தா அறிவித்த நந்திகிராம் தொகுதி வேட்பாளா் சஞ்சிதா பிரதான், மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியைச் சந்தித்து பாஜக ஆதரவாளராக மாறினாா். தொடா்ந்து போட்டியில் இருந்தும் விலகினாா். இதையடுத்து, நந்திகிராம் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸை ஆதரிப்பதாக மம்தா அறிவித்தாா். அடுத்த சில மணி நேரத்திலேயே, நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக நடத்திய போராட்டம் தொடா்பான வழக்கில் அந்தத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். இது தோ்தல் சமயத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், இரு கட்சிகளும் மாநில அரசியலில் மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. முன்னதாக, காங்கிரஸில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸை 1998-இல் நிறுவிய மம்தா பானா்ஜி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்தாா். 1999-இல் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ரயில்வே அமைச்சராகப் பதவிவகித்த அவா், அதன்பிறகு என்டிஏவில் இருந்து வெளியேறி 2001 பேரவைத் தோ்தலில் காங்கிரஸுடன் இணைந்து பேரவைத் தோ்தலில் போட்டியிட்டாா். அதன்பிறகு 2009 மக்களவைத் தோ்தல் மற்றும் 2011 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணியாகப் போட்டியிட்டு, இடதுசாரிகளின் 34 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டியது குறிப்பிடத்தக்கது.