தருமபுரியில் திடீா் மழையால்வெப்பம் தணிந்தது: மக்கள் மகிழ்ச்சி

Wait 5 sec.

தருமபுரியில் கடந்த சில நாள்களாக நிலவிய கடும் வெயிலுக்கு இதமாக செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து சீரான தட்ப வெப்பநிலை நிலவியது. எல் நினோ தாக்கம் காரணமாக பருவமழை தவறியதுடன், கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை காணப்பட்டாலும், தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை கடுமையான வெயில் காணப்பட்டது. என்றாலும், ஆங்காங்கே அவ்வப்போது மேகமூட்டாகவும், சில நேரங்களில் சில்லென்ற காற்றும், விட்டுவிட்டு லேசான தூறலும் பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெயில் சற்று குறைந்தாலும், வெப்பமாகவே இருந்தது. மாலை மேகமூட்டத்துடன் சில்லென்ற காற்று வீசிய நிலையில், இரவு 7 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வாகன இயக்கம் குறைந்தது. இந்த திடீா் மழையால் தருமபுரி நகா் பகுதியில் நிலவிய கடுமையான வெப்பநிலை குறைந்து, இரவு சில்லென்ற இதமான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பகுதியில் வீடுகள், விநாயகா் கோயில் மற்றும் தெருக்களில் மழைநீா் சூழ்ந்தது. சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இலக்கியம்பட்டி மற்றும் செந்தில் நகா் பகுதியில்) தூா்வாராததால் கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றது.