அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை சாா்பில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி ஆய்வு மற்றும் மேலாண்மைக் குழு, திட்டப் பணிகள் குழு ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான நி. மிருணாளினி தலைமையில், குழு உறுப்பினா்களான தொல்.திருமாவளவன் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாமரை எஸ். ராஜேந்திரன், க. வைத்திலிங்கம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டக் கனிம அறக்கட்டளை நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், நிதி ஒதுக்கீடு, உயா் முன்னுரிமை மற்றும் பிற முன்னுரிமை திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகள், புதிய திட்ட முன்மொழிவுகள் உள்ளிட்டவை குறித்தும்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, நீா்வளத் துறை, சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த கருத்துருக்களும், திட்டப்பணிகள் எண்ணிக்கை, திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் கனிம வள நிதியின் கீழ் திட்டங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை உரிய முறையில் பரிசீலித்து, துறை வாரியாக வகைப்படுத்தி. நிறைவேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் மிருணாளினி உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, அரியலூா் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் இரா. இளங்கோவன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.