அரசு (State) என்பது நிலத்தையும் அங்கே வாழும் மக்களையும் உள்ளடக்கிய இறையாண்மை கொண்ட அமைப்பாகும். மக்களின் வலிமைதான் அரசின் வலிமை. மக்களின் நலன்தான் அரசின் நலன். அரசையும் மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. நீடித்த நிலையான அரசு என்பது, மக்களின் நீடித்த ஆரோக்கியத்தையும் நிலையான வளர்ச்சியையும் உள்ளடக்கியது. மக்களைப் பற்றிய விவரங்கள், புரிதல்கள் இல்லாமல் எந்த அரசும் நீடிக்க முடியாது; எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்திவிட முடியாது. அரசு கொண்டுவரும் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய வேண்டும் என்றால், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்களின் வலிமையே நாட்டின் வலிமையாக மாறுகிறது. உலகெங்கிலும் பல்வேறு அரசுகளிடம் இந்தப் புரிதல்கள் மிகத் தாமதமாகவே ஏற்பட்டன. அந்தப் புரிதலின் அடிப்படையில்தான், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுகள் மக்களைப் பற்றிய விவரங்களை ஆவணங்களாகத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் மிக முக்கியமான நடவடிக்கை பிறப்பு, இறப்புகள் மற்றும் திருமணங்கள் பதிவுச் சட்டம். 1886-ஆம் ஆண்டில் பிரிட்ஷ் அரசு இங்கிலாந்து மக்களின் பிறப்புகள், இறப்புகள் மற்றும் திருமணங்களைப் பதிவு செய்யும் சட்டத்தைக் கொண்டுவந்தது. மக்கள் தங்கள் இல்லங்களில் நிகழும் பிறப்புகள், இறப்புகள் மற்றும் திருமணங்களைத் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்யும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது. அதில் கிடைத்த விவரங்கள் பிரிட்டிஷ் அரசின் திட்டங்கள் மிகத் துல்லியமாக மக்களைச் சென்றடைய உதவின. பின்னாளில், இந்தச் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. தனது காலனி நாடுகளுக்கும் இந்த நடைமுறைகளை பிரிட்டிஷ் அரசு விரிவுபடுத்தியது. பிறப்புகள், இறப்புகள் மற்றும் திருமணங்களைப் பதிவு செய்வது என்பது நாட்டின் நலனை உள்ளடக்கிய மிக முக்கியமான நடவடிக்கை என்பதை உலகின் பல்வேறு நாடுகள் உணர்ந்து கொண்டு செயல்பட ஆரம்பித்தன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த பின்னர் மிக நீண்ட காலத்திற்கு அப்புறம்தான், இந்திய அரசு 1969-ஆம் ஆண்டு பிறப்புகள், இறப்புகள் பதிவுச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின்படி பிறப்பு மற்றும் இறப்பு - நடந்த 21 நாள்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களைத் தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகள் அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தினரால் தகவல் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஊராட்சி நிர்வாகங்கள் தங்களுடைய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேடுகளை 3 ஆண்டுகள் வரை தங்களுடைய பராமரிப்பில் வைத்திருப்பார்கள். அதன் பிறகு அந்தப் பதிவேடுகள் தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களில் பராமரிக்கப்படும். நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் தங்களது அலுவலகங்களிலேயே பராமரித்து வருவார்கள். 21 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், ஓராண்டு வரை தொடர்புடைய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு அபராதத் தொகையுடன் பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைய நிலையில், ஓர் ஆண்டைக் கடந்த பின்னர், பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யக் கோரி வரும் மனுக்கள், தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு முறையான விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உரிய பதிவு அலுவலகத்திற்கு உத்தரவு வழங்கப்படும். அதன் பிறகு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சான்றுகள் வழங்கப்படும். இந்த நடைமுறைகள் ஒரு சிவில் வழக்கைப் போல நீண்டு வருவதால், மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இந்த விசாரணை நடைமுறைகள் பல நேரங்களில் வெறும் சம்பிரதாய நடவடிக்கைகளாகவும் ஒருதரப்பு சார்பான நடவடிக்கைகளாகவும் இருந்து வருகின்றன. இதனால் தாமதமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு பதிவுகளில் தவறுகள் நடைபெறுகின்றன; தொடர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தற்போதைய நடைமுறைகளில் ஏற்படும் தவறுகளைக் களைவதற்காக, பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுகள் திருத்தச் சட்டம் 2026 மசோதாவைக் கொண்டுவந்து மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது (இந்தச் சட்டம், வரும் அக். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது). இதன்படி ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான தாமதப் பதிவுகள் விஷயத்தில் தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலான தாமதப் பதிவுகளை முதல் வகுப்பு நீதித்துறை நடுவரின் உத்தரவின் பேரில்தான் பதிவு செய்ய இயலும். இதன் மூலம் தற்போது ஏற்படும் காலதாமதத்தையும் தவறுகளையும் குறைக்க முடியும். மேலும் இளம் வழக்குரைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். பிறப்புகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வதன் முக்கியத்துவம் நமது மக்களுக்குத் தெரியவில்லை. பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் இறப்புகளிலும் பல்வேறு தவறுகள் காணப்படுகின்றன. இதற்கு தகவல் அளித்தவர்களை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியானவைதானா என்பதை உறுதி செய்யாமல் பதிவு செய்த ஊழியர்களும் காரணமாகின்றனர். இதனால் இந்தச் சான்றுகள் பயன்படும் நேரத்தில் தவறுகள் கண்டறியப்பட்டு நிராகரிக்கப்படும்போது, தொடர்புடைய நபர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுகின்றன. சில நேரங்களில் சிலர் மோசடிக்குள்ளாக்கப்படுவதும் நடைபெறுகிறது.பிறப்புகள் தொடர்பான பதிவுகளில் ஏற்படும் தவறுகளால் பள்ளி இறுதித் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் மூன்றிலும் குழந்தையின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர்கள் ஒரே மாதிரியான எழுத்துகளுடன் இருக்க வேண்டும். பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். இந்த விவரங்களில் ஏதேனும் மாறுதல்கள் இருந்தால், கணினியில் பதிவேற்றம் செய்யும்போது அவை தடைப்பட்டு நிராகரிப்புக்கு உள்ளாகிவிடுகின்றன. பெரும்பான்மையான பெற்றோர்கள் அப்போதுதான் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் தவறுகள் உள்ளதையே கவனிக்கின்றனர். அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்று ஆராயாமல் பெறப்படும் பிறப்புச் சான்றிதழ்களால் குழந்தைகளும் பெற்றோர்களும் பள்ளி இறுதித் தேர்வு நேரத்தில் பாதிக்கப்படுகின்றனர். ஒரே நேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். தனது மகளின் பிறப்புச் சான்றிதழில் உள்ள தவறைக் கவனிக்காத கல்யாணசுந்தரத்தின் கதையை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு எழுதச் செல்லும் தனது மகளின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தவறாக உள்ளதைத் திருத்தம் செய்ய வேண்டும் என மணப்பாறை நகராட்சி அலுவலகத்திற்கும் பதிவாளர் அலுவலகத்திற்கும் ஆறு மாதங்களுக்கும் மேலாக கல்யாணசுந்தரம் அலைந்துகொண்டிருந்தார். பிறப்புச் சான்றிதழில் மகளின் பெயர் சரியாக இருக்கிறது. பிறந்த தேதி சரியாக இருக்கிறது. தாயின் பெயர் சரியாக இருக்கிறது. தந்தையின் பெயர் உள்ள காலத்தில் ‘கல்யாணசுந்தரம்’ என்பதற்குப் பதிலாக ‘சுந்தரம்’ என்று பதிவாகி இருந்தது. மகளின் பள்ளி ஆவணங்களிலும் தந்தையின் பெயர் உள்ள இடத்தில் ‘கல்யாணசுந்தரம்’ என்று சரியாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆதார் ஆவணத்திலும் ‘கல்யாணசுந்தரம்’ என்றே பதிவாகி இருந்தது. எனவே பிறப்புச் சான்றிதழிலும் தந்தையின் பெயர் உள்ள காலத்தில் ‘சுந்தரம்’ என்பதை நீக்கிவிட்டு ‘கல்யாணசுந்தரம்’ என்று பதிவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அதை மாற்றித் தருவதற்கு நகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டது. அதில் நாங்கள் கை வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பள்ளி இறுதித் தேர்வு நெருங்கிவிட்டது. தேர்வு எழுதும் மாணவர்களின் சரியான விவரங்களுடன் பட்டியலைத் தயார்செய்து பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் பள்ளி நிர்வாகத்திற்கும் நெருக்கடியைத் தந்தது. கல்யாணசுந்தரத்திற்கு அலைச்சலும் மன உளைச்சலும்தான் மிஞ்சியதே தவிர, வேலை நடக்கவில்லை. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த குழந்தையையும் பாதித்தது.நகராட்சி நிர்வாகமும் பதிவுத்துறையும் கைவிட்ட நிலையில்தான் கல்யாணசுந்தரத்திற்கு நீதிமன்றம் நினைவுக்கு வந்துள்ளது. அலுவலகம் வந்தார். மாண்புமிகு உயர்நீதிமன்றம் சென்று முறையீடுவதற்கான கால அவகாசம் இல்லை. அதற்கான வசதி வாய்ப்பும் அவரிடம் இல்லை. அவருக்கு ஏதாவது உதவி செய்தாக வேண்டுமே என்று ஆராய்ந்தபோதுதான், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்கள் K. Ranganathan Vs The Commissioner, Erode City Municipal Corporation (2015 (5) CTC 360) என்ற வழக்கில், பிறப்புச் சான்றிதழ்களில் பிறந்த தேதியைத் தவிர வேறு எந்தத் திருத்தமும் செய்வதற்கு சிவில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக (பிறப்புச் சான்றிதழில், பிறந்த தேதியைத் தவிர வேறு எந்த ஒரு திருத்தமும் செய்ய வேண்டும் என்றால், சிவில் நீதிமன்றங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது. பிறப்பு இறப்பு பதிவாளருக்கு அந்த அதிகாரம் இல்லை) உத்தரவிட்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. உடனடியாக அவசர வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சிவில் நீதிமன்றம் தனக்குரிய விருப்புரிமை அதிகாரத்தைப் (Discretionary Power) பயன்படுத்தி ஒரு மாதத்திற்குள் கல்யாணசுந்தரத்தின் மகளுக்கு திருத்தப்பட்ட பிறப்புச் சான்று கிடைக்க ஆவன செய்தது. குழந்தையும் தடையின்றித் தேர்வு எழுதிவிட்டாள். நல்ல மதிப்பெண் பெற்று தற்போது மேல்நிலைக் கல்வியைத் தொடர்கின்றாள். சிறிய தவறுகள்தான் பெரிய நெருக்கடிகளையும் இழப்புகளையும் ஏற்படுத்திவிடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிறப்புகள் பதிவு செய்யப்படுவதைப்போலவே இறப்புகள் பதிவு செய்யப்படுவதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று பெற்றவுடன் உடனடியாக வாரிசுச் சான்றையும் பெற வேண்டும். வாரிசுச் சான்று பெற்றவுடன் தொடர்புடைய வருவாய் ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இறப்புகள் பதிவு செய்யப்படும்போது ஏற்படும் தவறுகளால் வாரிசுச் சான்று, வங்கிக் கணக்கில் பெயர் மாற்றம், நில உரிமை தொடர்பான வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இறப்புகள் தொடர்பான பதிவுகளில் ஏற்படும் தவறுகள் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு திருத்தம் செய்யப்படாவிட்டால், ஒரே சொத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உரிமை கொண்டாடுவார்கள். அசலைவிட போலிகள் தெளிவாக உலா வருவார்கள். உண்மையான வாரிசுகள் சொத்தை இழக்க வேண்டிய நெருக்கடி உருவாகும்.விராலிமலை அருகே இராசாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்க கவுண்டர் மகன் அடைக்க கவுண்டர். 1975 ஆம் ஆண்டிலேயே இறந்தவிட்டார். அவருடைய பூர்விகச் சொத்துகளை வாரிசுகளான ராமசாமி, மூக்கன்,தமிழரசி மூவரும் அனுபவித்து வருகிறார்கள். 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பட்டா பெயர் மாற்ற முயற்சி செய்யும்போதுதான் இறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதையும் வாரிசுச் சான்று பெறப்படவில்லை என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். காலதாமதமாக இறப்புச் சான்று கோரி விண்ணப்பித்து இறப்புச் சான்று பெற்றுள்ளனர். தற்போதைய நிலையில் வாரிசுச் சான்றுக்காக அவர்கள் நீதிமன்றம் சென்றாக வேண்டும். இதற்கிடையே சங்க கவுண்டர் மகன் அடைக்க கவுண்டர் என்ற பெயரில் வேறு ஒருவர் இறப்புச் சான்று பெற்றிருப்பதும் அதன் அடிப்படையில் வாரிசு சான்று தயாரித்து சொத்தை விற்பனை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அனுபவ பாத்தியதை உண்மையான வாரிசுகளிடம் இருந்தபோதிலும், மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட கிரையத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அசல் வாரிசுகள் தற்போது நீதிமன்றத்தில் தங்களுக்கான நீதியைத் தேடிக் காத்திருக்கிறார்கள். தகுந்த நேரத்தில் தகுந்த ஒன்றைச் செய்யத் தவறினால் விளைவு மிக மோசமானதாகவும் பேரிழப்பாகவும் அமைந்துவிடுகிறது. இது அடைக்க கவுண்டரின் வாரிசுகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான பாடம்.பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு என்பது வெறும் புள்ளி விவரங்களுக்கான பதிவுகள் மட்டுமல்ல; அவை மனிதவள மேம்பாட்டிற்கான ஆதாரப் புள்ளியாகவும் அமைகின்றன. எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்ப அமைப்பைத் தெரிந்து கொள்வதற்கான ஆவணங்களாகவும் அந்தப் பதிவுகள் இருக்கின்றன.பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்வதை மனித வாழ்வின் ஒரு பகுதியாகவும் கடமையாகவும் கொள்ள வேண்டும். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தின் பல தலைமுறையினர் (Genealogical Tree) பற்றிய விவரத்தை அங்குள்ள பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளர் அலுவலகத்தின் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதைப் போல, இந்தியாவிலும் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு தொடர்பாக மேம்பட்ட தரவு அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஜப்பானியர்களைப்போல, நாம் ஒவ்வொருவரும் நமது குடும்பக் கொடிவழியைப் (Genealogical Tree) பதிவு செய்வதற்கும் அவற்றைத் தெரிந்து கொள்வதற்கும் வசதியாக பிறப்புகள் மற்றும் இறப்புகள் தொடர்பாக சிறப்பு பதிவாளர் அலுவலகங்களைத் தோற்றுவிக்க வேண்டும். அந்த நடவடிக்கைகள் எதிர்கால இந்தியாவின் மனிதவள மேம்பாட்டிற்கான கட்டமைப்பாகவும் அமையும். நீதிக்கான குரல் ஒலிக்கும்...நியாயத்திற்கான பயணம் தொடரும்...கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்Tamilmani Arumugam, Advocate.advocatetamilmani@gmail.comRegarding the legal procedures for rectifying errors in birth and death certificates through the courts—changes that will come into effect from October 1st.நிலம் என்பது வெறும் மண் அல்ல, உயிர்! நிலம் காக்கும் ஜமாபந்திகள்! நீதியும் நியாயமும் - 4