ஜேசன் சஞ்சய் எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்திற்கு வருவார் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கில் மண்டாடி திரைப்படக் குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து இன்று திரைப்படத்தைப் பார்த்தனர். தொடர்ந்து ரசிகர்களுடன் கலந்துரையாடிய திரைப்படக் குழுவினர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.அதில் சூரி பேசியதாவது, மதுரை மக்களுக்கு மிக்க நன்றி. மண்டாடி திரைப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு வருடம் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்ததற்கு கிடைத்த வெற்றி இது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர். அவர்களை திருப்திப்படுத்தினாலே போதும். ‘புரோட்டா சூரி’ என்று ஒன்று கிடையாது. சூரி என்பதுதான் என்னுடைய பெயர். நகைச்சுவை நடிகராக இருந்து கதை நாயகனாகவும், தற்போது கதாநாயகனாகவும் மாறியுள்ளேன். மக்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். என் கையைப் பிடித்து கூட்டி வந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி.அயலான் திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். முழுமையாக மதுரையை மையமாகக் கொண்ட ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விரைவில் அப்படியொரு படத்தில் நடிப்பேன். என்னுடைய சினிமா வாழ்க்கையில் மண்டாடி முக்கியமான படமாக அமைந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படப்பிடிப்பின்போது பல இடங்களில் அடிபட்டது. கப்பலில் இருந்து கீழே விழுந்தபோது நன்றாக வலித்தது. ஒரு காயம் நேற்றைக்கு ஏற்பட்டது, இன்னொரு காயம் அதற்கு முந்தைய நாளில் ஏற்பட்டது என்று சொல்லும் அளவுக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. கல்யாண போட்டோக்களை பார்ப்பது போல படப்பிடிப்பில் ஏற்பட்ட அடிகளையும் காயங்களையும் ஜெராக்ஸ் எடுத்து பார்த்தால்தான் எந்த காயம் எப்போது ஏற்பட்டது என்பது தெரியும். அந்த அளவுக்கு பல காயங்கள் ஏற்பட்டன. ஆனால் படம் வெளியான பிறகு அந்த வலிகள் அனைத்தும் மகிழ்ச்சியாக மாறிவிட்டன. இவ்வளவு பெரிய ஸ்டாரின் மகன் என்ற சின்ன விஷயத்தைக் கூட சஞ்சய்யிடம் பார்க்க முடியாது. அவரிடம் தெளிவு, பணிவு, நிதானம் உள்ளது. கண்டிப்பாக எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். அவர் சொன்னதைப் போல எதிர்காலத்தில் அவருடன் இணைந்து கண்டிப்பாக ஒரு படம் பண்ணலாம்.ஒரு நடிகனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது ரஜினியிடம் வாழ்த்து பெறுவதுதான். விடுதலை திரைப்படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது மண்டாடி திரைப்படத்தை பார்த்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த டிரஸ், அந்த டிரஸ் என எதுவும் இல்லை. நான் எப்போதும் மனிதன் தான். சூரிக்கு எந்த டிரஸ் போட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பான் என்றார். மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் தயாரித்துள்ளனர். சூரி கதாநாயகனாகவும், மகிமா நம்பியார் கதாநாயகியாகவும் நடித்துள்ள நிலையில், தெலுங்கு நடிகர் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு