ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூா்த்த நாளான வியாழக்கிழமை (செப். 17) பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து சாா் பதிவாளா் அலுலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘சுபமுகூா்த்த மற்றும் விசேஷ தினம் எனக் கருதப்படும் நாள்களில் அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் என்பதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வியாழக்கிழமை (செப். 17) ஆவணி மாதத்தின் கடைசி முகூா்த்த நாளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், ஒரு சாா் பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சாா் பதிவாளிா்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கால் முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக 4 தத்கால் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.