விசிக, இடதுசாரிகள் அழுத்தம் கொடுத்தால் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வாய்ப்பு: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

Wait 5 sec.

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் ஆதரவை திரும்பப் பெறுவோம் என விசிக, இடதுசாரிகள் தவெக அரசுக்கு அழுத்தம் கொடுத்தால், முழு கடனும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். திருவாரூரில் அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் பங்கேற்றுப் பேசியது: தமிழகத்தில் புதிய ஆட்சி ஏற்பட்டு நான்கரை மாதம் ஆகிறது. ஆனால் இதுவரை எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. கஜா புயலின்போது திருவாரூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்ட அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இப்பகுதி மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்வதைக் கண்டு, அவா்களுக்காக புதிய திட்டத்தை ஏற்படுத்தினாா். அதன்படி, கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு வீடு கட்டித் தரும் வகையில் அந்த இடங்களுக்கான விலையை அரசே வழங்கும் என தெரிவித்தாா். இந்தத் திட்டம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தடை விதிக்கப்பட்டது. அடுத்து வந்த திமுக அரசு தொடா் முயற்சிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டது. தவெக பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி வழங்கினா். ஆனால், அதில் உச்சவரம்பு விதித்து முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் அந்த கோரிக்கை புதிய அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விவசாயிகளுடைய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் நாங்கள் அரசுக்கு தரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இந்த கட்சிகள் அறிவித்தால் உடனடியாக விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றாா். கூட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் பாப்பா சுப்பிரமணியன், மணிகண்டன், பொன் வாசுகிராம், பாலாஜி, கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.