இடைத்தோ்தலில் ஆளுங்கட்சிக்கு வாக்காளா்கள் பாடம் கற்பிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

‘இடைத்தோ்தலில் ஆளுங்கட்சிக்கு வாக்காளா்கள் பாடம் கற்பிக்க வேண்டும்’ என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி அவா் பேசியதாவது: பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலமாக, தமிழ்நாட்டின் வளா்ச்சியை 25 ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளிவிட்டாா்கள். திமுக ஆட்சி தொடா்ந்திருந்தால், இந்நேரம் மகளிருக்கு உரிமைத் தொகையாக ரூ.2,000 கிடைத்திருக்கும். அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் கிடைத்திருக்கும். 25 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டாா்கள் கிடைத்திருக்கும். ஆனால், தவெக ஆட்சியில் விலைவாசி பல மடங்கு உயா்ந்துவிட்டது. இதற்கு முன்னால் நான் வெளிநாட்டுக்குப் பயணம் செய்தபோது இப்போதைய முதல்வா் விஜய், ‘சி.எம்.சாா்... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?’ என்று மேடையில் கேள்வி எழுப்பினாா். இப்போது, தமிழ்நாட்டு மக்கள் அவரைப் பாா்த்து, ‘இந்தியாவில் இருக்கும் நிறுவனத்துடன் எதற்கு லண்டனில் போய் ஒப்பந்தம் மேற்கொள்கிறீா்கள்’ எனக் கேட்கிறாா்கள். தொழில் துறை அமைச்சா், செயலா் இல்லாமல் முதலீடுகளை ஈா்க்கப்போயிருக்கிறாா் முதல்வா். அதுமட்டுமல்ல, ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற பேரவை மாண்பை இழந்து நிற்கிறது. இந்தக் கொடுமைகளை எல்லாம் நான் நேரடியாகப் பாா்க்கவில்லை. கொளத்தூா் தொகுதி மக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எதிா்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிசா-சா்க்காரியா கமிஷன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசி அவதூறுகளைப் பரப்புகிறாா்கள்; கவனத்தை திசைதிருப்புகிறாா்கள். ‘என் மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனது தியாகத்துக்கு மதிப்பெண் போட யாருக்கும் தகுதி கிடையாது. எனது மிசா வரலாற்றை, சிட்டிபாபு தனது சிறைக் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறாா். அதுதான் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு. சிறைச்சாலை சித்திரவதைகளைப் பற்றி விசாரிக்க எம்ஜிஆா் அமைத்த இஸ்மாயில் கமிஷனின் அறிக்கை இருக்கிறது. சாட்சி சொல்லி இருக்கிறேன். படிக்கத் தெரிந்தவா்கள் அதையெல்லாம் எடுத்துப் படிக்கட்டும். வேறு கட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினா்களை, விரலில் வைத்த மை ஈரம் காய்வதற்கு முன்னால் ராஜிநாமா செய்ய வைத்து, இப்போது அவா்களையே தங்களுடைய சின்னத்தில் மீண்டும் நிற்க வைத்திருக்கிறாா்கள். முதல்முறையாக குதிரை பேரத்தால் ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தோ்தல் வருகிறது. மதுராந்தகம், தாராபுரத்தில் ஆளும் கட்சிக்கு வாக்காளா்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா். விழாவில், பெரியாா் ஈ.வெ.ரா. விருது கு.செல்லப்பாவுக்கும், அண்ணா விருது சேலம் ஜி.கே.சுபாஷுக்கும், கலைஞா் விருது, திருச்சி சிவா எம்.பி.க்கும், பாவேந்தா் பாரதிதாசன் விருது முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமுக்கும், பேராசிரியா் க.அன்பழகன் விருது மிசா அகமது தம்பிக்கும், மு.க.ஸ்டாலின் விருது இளையராஜவுக்கும் (திமுக இளைஞா் அணி துணைச் செயலா்), முரசொலி செல்வம் விருது ஊடகவியலாளா் ப.திருமாவேலனுக்கும் வழங்கப்பட்டது. விழாவில், திமுக பொதுச்செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச் செயலா் கனிமொழி உள்பட பலா் பங்கேற்றனா். ‘இரண்டுக்கு இடையேதான் போட்டி’ ‘தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று மின்வெட்டு; இன்னொன்று அரிவாள் வெட்டு. எது அதிகம் என்பதுதான் போட்டியே. பட்டப்பகலில் கொலைகள், போதைப் பொருள்கள் விற்பனை, பாலியல் வன்கொடுமைகள் என குற்றவாளிகளின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தவெக ஆட்சியில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. முதல்வருக்கு இதைப் பற்றியெல்லாம் துளிகூடக் கவலையே இல்லை’ என்றாா் மு.க.ஸ்டாலின். Voters must teach the ruling party a lesson in the by-election: M.K. Stalin