நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலேயே முனைவர் பட்டம் பெற்று, இயற்பியல் கருத்தியல் பேராசிரியராகப் பணியாற்றியவர், அணுக்கரு இயற்பியல் விஞ்ஞானி தேவநாதன். இவர் தமிழ்நாட்டில், முதன்முதலாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் அணுக்கரு இயற்பியல் துறையை உருவாக்கி, அந்தத் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1990-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெறும் வரை ஆய்வு மேற்கொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும், ஆலோசனைகளை அளிக்கும் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.இவரது நெறியாளுகையின்கீழ் 15 பேரும், அவர்கள் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், ஆராய்ச்சி மையங்களில் உயர்பொறுப்புகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியுள்ளனர். இவர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களுக்கு வருகைதரு பேராசிரியராக இருந்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் அகாதெமியின் தலைவராக தற்போது வரை பொறுப்பில் உள்ளார்.1930 - ஆம் ஆண்டு கடலூர் அருகேயுள்ள திருப்பாதிரிப்புலியூரில் நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர் வரதராஜ முதலியாருக்கு மகனாகப் பிறந்தார் தேவநாதன். திருப்பாதிரிப் புலியூர் மடத்தில் நடத்தப்பட்ட சிறிய பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். தந்தையின் பணி சூழல் காரணமாக அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், காஞ்சிபுரம் பச்சையப்பா பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இயற்பியல் பாடப்பிரிவில் பி.எஸ்.சி (ஹானர்ஸ்), எம்.எஸ்.சி., முனைவர் பட்டங்களை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.இந்தியாவில் அணுக்கரு இயற்பியல் மூத்த விஞ்ஞானி ஹோமி பாபாவின் மாணவரான இயற்பியல் விஞ்ஞானி அல்லாடி ராமகிருஷ்ணனின் மாணவராக அணுக்கரு இயற்பியல் படித்து முனைவர் பட்டம் பெற்றவர் பேராசிரியர் தேவநாதன்.1951- ஆம் ஆண்டில் பச்சையப்பா கல்லூரியில் இயற்பியல் துறை விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1957-ஆம் ஆண்டு முதல் 1969 வரை, அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியிலும், அதன்பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் 1990-ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரையில் பணியாற்றினார். பின்னர் அவர் 1995-ஆம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள படிகவளர்ச்சி ஆய்வு மையத்தில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.அணுக்கரு பையான் ஒளி உற்பத்தி, குவாண்டம் இயக்கவியலில் கோண உந்த நுட்பங்கள், குவாண்டம் இயக்கவியல், அணுக்கரு இயற்பியல், சார்பியல் குவாண்டம் இயக்கவியல், குவாண்டம் புலக் கோட்பாடு, சார்பியல் குவாண்டம் இயற்பியல் பாடநூல் போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். இவை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் பயன்பாட்டில் உள்ளதோடு, நிரந்தரப் பாடப்புத்தகமாக சில பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 150 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி, பன்னாட்டு இதழ்களில் பிரசுரித்துள்ளார். கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையம் (இத்தாலி), ஜெர்மன் ஆராய்ச்சி அறக்கட்டளை (மேற்கு ஜெர்மனி), சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையம், டிரையஸ்ட் (இத்தாலி), தமிழ்நாடு அறிவியல் அகாதமி (சென்னை) போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.