வடமேற்கு பாகிஸ்தானில் பழைய காவல் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 5 போலீஸாா் உள்பட 16 போ் உயிரிழந்தனா்; 78 போ் காயமடைந்தனா். கைபா் பக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் இருந்து தென்மேற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள கோஹட் நகரில், வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்காக போலீஸாா், அவா்களின் குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் மசூதியில் திரண்டிருந்தனா். அப்போது, வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்த பயங்கரவாதி, மசூதியின் நுழைவு வாயில் மற்றும் சுற்றுச்சுவா் மீது மோதி வாகனத்தை வெடிக்கச் செய்தாா். இதில் மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததுடன், அப்பகுதியில் பெரும் பள்ளமும் உருவானது.குண்டுவெடிப்பைத் தொடா்ந்து, அங்கிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினா், இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இக்கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி சா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். ‘இத்தேஹத் உல் முஜாஹிதீன் பாகிஸ்தான்’ என்ற பயங்கரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இப்பகுதியில் செயல்படும் முக்கியப் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான், இத்தாக்குதலில் தங்களுக்குத் தொடா்பில்லை என மறுத்துள்ளது. கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அண்மைக்காலமாக பாதுகாப்புப் படையினரையும், காவல் துறையினரையும் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.தற்கொலைப் படையின் வெடிகுண்டு தாக்குதலையடுத்து உருக்குலைந்த மசூதி.