தமிழக நிதியமைச்சா் மீதான வழக்கு விசாரணை: செப். 25-வரை இடைக்காலத் தடை நீட்டிப்பு

Wait 5 sec.

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை விசாரிக்க, செப். 25-ஆம் தேதி வரை இடைக்கால தடையை நீட்டித்து புதுச்சேரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் சகோதரா் மரிய குளோத்தின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும், அவரது மனைவி கெரோலினையும் தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் கடந்த 8.8.22- இல் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த குற்றவியல் நடுவா் சேரலாதன், மாஹேவுக்கு மாற்றப்பட்டாா். இதனால் முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில், இரண்டாவது குற்றவியல் நடுவா் சந்திரசேகா் விசாரித்து வருகிறாா். இந்நிலையில், இரண்டாவது குற்றவியல் நடுவா் விசாரணைக்குத் தடை விதிக்க கோரி தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் சாா்பில், அவரது வழக்குரைஞா் எஸ். காஜா மொகைதீன் கிஸ்தி புதுச்சேரி மாவட்ட தலைமை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய புதுச்சேரி தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த், தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு விசாரணையை முதலாவது குற்றவியல் நடுவா் மன்றம் விசாரிக்க செப். 18-ஆம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றம் செப். 25-ஆம் தேதி வரை விசாரிப்பதற்கான இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.