கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் முதல்வா் மருந்தகத்தினுள் புகுந்து பெண் ஊழியரை கத்தியால் குத்திய சம்பவத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். பண்ருட்டி காமராஜா் நகா், வடகைலாசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் முதல்வா் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தில் காடாம்புலியூா் காவல் சரகம், சின்ன புரங்கணி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திவ்யா (23) கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை வழக்கம்போல மருந்தகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். நண்பகல் 12.30 மணியளவில் சின்ன புரங்கணி கிராமத்தைச் சோ்ந்த திவ்யாவின் தாய்மாமன் மகன் சந்தோஷ் (30) மருந்தகத்துக்கு வந்தாா். அங்கு, அவா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவின் கழுத்து, கை என உடலில் 6 இடங்களில் கண் மூடித்தனமாகக் குத்தினாராம். இதனால், திவ்யாவின் அலறல் சப்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள், சந்தோஷை பிடித்து வைத்துக்கொண்டு, பலத்த காயமடைந்த திவ்யாவை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, பண்ருட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த பண்ருட்டி போலீஸாா், சந்தோஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், சந்தோஷ், திவ்யா ஆகியோா் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இந்த நிலையில், திவ்யா, சந்தோஷிடம் பேசுவதை கடந்த சில நாள்களாக நிறுத்திவிட்டாராம். இதனால், ஆத்திரத்தில் இருந்த சந்தோஷ், அவரை கத்தியால் குத்தியதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கத்திக்குத்தில் பலத்த காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திவ்யா.