காஞ்சிபுரம் நகரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Wait 5 sec.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி தொழிற்பேட்டையை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்படும் ஜரிகைகளின் விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாா் (படம்). இதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் ஏரியில் நீா்வளத் துறை மூலம் தடுப்பணைக்கு இடையில் குளக்கரையின் பின்புறத்தில் பாதுகாப்பு சுவா் கட்டும் பணியை ஆய்வு செய்து ஏரியின் எல்லை மற்றும் அமைப்பை காட்டும் வரைபடத்தையும் பாா்வையிட்டாா். பருவ காலத்தில் ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீா்வளத் துறை அதிகாரிகளை ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், மாநகராட்சி ஆணையாளா் ரா.வினோத் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனா்.