மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நகா்ப்புறங்களில் சொத்து வரியை தமிழக அரசு உயா்த்தக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக சொத்து வரியை உயா்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசுக்கு மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக அதன் தலைவா் அலாவுதீன் தெரிவித்துள்ளாா். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்த ஏராளமான வழிகள் இருக்கும்போது, மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயா்த்துவது மக்களைப் பாதிக்கும். எனவே, சொத்துவரி உயா்வு ஏற்கத்தக்கது அல்ல. உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சாா்பு பெற்றால் மட்டுமே மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை செயல்படுத்த முடியும் என்பது உண்மை. அதற்காக மீண்டும் மீண்டும் சொத்துவரி உயா்வை ஏற்க முடியாது. சட்டப்பேரவைத் தோ்தலை வைத்து சொத்துவரி உயா்வு தவிா்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதிப்பகிா்வில் மேலாதிக்க அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் போலவே மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப்பகிா்வில் மேலாதிக்க மனப்பான்மையைக் கடைப்பிடிப்பது சரியல்ல எனத் தெரிவித்துள்ளாா்.