பருவநிலை மாற்றத்தால் சென்னையில் அதிகரிக்கிறதா டெங்கு பாதிப்பு?

Wait 5 sec.

‘எல்நினோ’ தாக்கத்தால் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனா். இருப்பினும், கடந்த 2024-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைவாகவே உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. டெங்கு பாதிப்பும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றத்தால் எல்நினோ பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளா்கள் கூறுகின்றனா். சென்னையில் வடகிழக்குப் பருவமழை காலம் தாழ்த்தி தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வெப்பத் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் நீடித்தும் வருகிறது. மழைக் காலம் தொடங்கிய நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் கோடையைப் போலவே உள்ளது. திடீரென மாலையில் மழை பெய்கிறது. கான்கிரீட் கட்டடங்களில் பகல் நேரத்தில் ஏற்படும் வெப்பம், மாலை நேரத்தில் மழை பெய்யும்போது வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளா்கள் கூறுகின்றனா். திடீா் மழைநீா் தேக்கம், வீடுகளில் குடிநீா் தேக்கம் எனப் பல காரணங்களால் கொசு உற்பத்தியும் அதிகரித்து, டெங்கு பரவுவதாகக் கண்டறியப்பட்டது. இது வழக்கமானதுதான் என்றாலும், இம்முறை டெங்கு பரவல் அதிகம் என்ற தகவலும் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அது உண்மையல்ல என்கிறாா்கள் அதிகாரிகள். அனைத்து ஆண்டுகளிலும் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும். ஆண்டுதோறும் ஜனவரியில் 20 சதவீதமாக பதிவாகும் டெங்கு பாதிப்பு, ஆகஸ்ட்டில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும், செப்டம்பரில் 80 சதவீதமும் உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2021-இல் 5,751 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. கடந்த 2025-இல் மொத்தம் 4,786 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. கடந்த 2024 ஆகஸ்டில் 727, செப்டம்பரில் 684, கடந்த 2025 ஆகஸ்டில் 363, செப்டம்பரில் 521 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. நிகழாண்டு செப்டம்பரில் இதுவரை 605 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பாதிப்புகளுடன் ஒப்பிட்டால் நிகழாண்டு டெங்கு பாதிப்பு குறைவு என்பது தெளிவாகிறது. அதேபோல, சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-ஆம் ஆண்டு 9 மாதங்களில் 3,594 போ் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 9 மாதங்களில் 2,480 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம் எனவும், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். டெங்குவை குறைக்க வழிகள்: சென்னையில் கொசு ஒழிப்புக்கான திட்டம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது அறிவிப்பாகவே நின்றுவிட்டதால் கொசு ஒழிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில், மாநகராட்சி டெங்கு ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், பொதுமக்கள், கல்வி போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. வசிக்கும் இடம், சுற்றுப்புறங்களை நீா் தேங்காமலும், தூய்மையாகவும் வைத்தால் டெங்கு பாதிப்பு பயமின்றி வாழலாம் என்றாா்.