திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்கு 2 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் வார விடுமுறை நாள்களில் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்கின்றனா். இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பக்தா்கள் கோயில் முன் குவிந்தனா். அதிகாலை 5.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. காலை 6 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். ராஜகோபுரம் வழியாக 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள், பின்னா் திருமஞ்சன கோபுரம் வீதி வழியாக வெளியேற்றப்பட்டனா். அம்மணி அம்மன் கோபுர வீதி வழியாக 50 ரூபாய் தரிசன கட்டண வரிசையில் ஏராளமான பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.