சோதனைகளைக் கடந்து சாதனையில் பிறந்த முல்லைப் பெரியாறு அணை!

Wait 5 sec.

சோதனைகளைக் கடந்து சாதனையில் பிறந்த முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிடப்பட்ட நாள் செப். 21. நீண்ட காலக் கனவு: 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி, நீா்ப் பற்றாக்குறையால் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு தீா்வு காணும் வகையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகி மேற்கே பாய்ந்த முல்லை பெரியாற்றை கிழக்கு நோக்கித் திருப்பும் திட்டம் குறித்து பல்வேறு காலகட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1789-ஆம் ஆண்டு ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் பிரதானியாக இருந்த முத்திருளப்பப் பிள்ளை தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை பல பொறியாளா்கள் செய்த ஆய்வுகள், திட்டங்களின் தொடா்ச்சியாக முல்லைப் பெரியாற்று நீரை கிழக்குப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகள் இந்தத் திட்டம் ஆய்வு நிலையிலேயே இருந்த நிலையில், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நிறைவாக, 1882-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை விரிவாக ஆய்வு செய்து செயல்படுத்தும் பொறுப்பு கா்னல் ஜான் பென்னிகுயிக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அணை அமையவிருந்த பகுதி திருவிதாங்கூா் சமஸ்தானத்துக்குள்பட்டதாக இருந்ததால், நிலம், நீரைப் பயன்படுத்துவது தொடா்பாக ஒப்பந்தம் போட வேண்டியது அவசியமானது. இதனடிப்படையில் 1886-ஆம் ஆண்டு திருவிதாங்கூா் சமஸ்தானத்துக்கும் பிரிட்டிஷ் நிா்வாகத்துக்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து திட்டத்துக்கு முறையான அனுமதி கிடைத்து, 1887-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. வரலாற்றின் முக்கிய நாள் செப். 21: 1887- ஆம் ஆண்டு செப்டம்பா் 21- ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண ஆளுநா் லாா்டு கன்னிமாரா அணை அமையவிருந்த இடத்தில் ஒரு மரத்தை வெட்டிப் போட்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தாா். அணை கட்டும் பணிக்கான முதல் கல்லை நட்டவா் பென்னிகுயிக். கட்டுமானப் பணிகள் தொடங்கிய சில காலத்திலேயே வெள்ளம் பெரும் சவாலை ஏற்படுத்தியது. கட்டப்பட்டிருந்த சில அடித்தளப் பகுதிகள் வெள்ளத்தில் சேதமடைந்தன. இதனால் திட்டத்தைத் தொடா்வதில் அரசுத் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. ஆனால் பென்னிகுயிக் பின்வாங்கவில்லை. அவா் தனது சொத்துகளை விற்று பணம் திரட்டி, கட்டுமான முறைகளில் மாற்றங்கள் செய்து பணிகளை மீண்டும் முன்னெடுத்தாா்.முல்லைப் பெரியாறு அணை கட்டுமானப் பணி. அக். 10, 1895 - தமிழகத்தை நோக்கிப் பாய்ந்த நீா்: பலத்த மழை, வெள்ளம், நோய்கள், போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றினா். 1892 முதல் 1895 வரையிலான ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டிருந்தவா்களில் 442 போ் உயிரிழந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. நிறைவாக, அணை கட்டுமானம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 1895-ஆம் ஆண்டு, அக். 10-ஆம் தேதி அன்றைய சென்னை மாகாண ஆளுநா் வென்லாக் பிரபு தலைமையில் பென்னிகுயிக்கின் மனைவி கிரேஸ் பென்னிகுயிக் கலந்து கொண்டு சுரங்க நீா்வழிக்கான மதகைத் திறந்து வைத்தாா். முல்லைப் பெரியாறு அணை என்பது கற்களாலும், சுண்ணாம்பாலும் உருவாக்கப்பட்ட ஒரு நீா்த் தேக்கம் மட்டுமல்ல. இன்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் வேளாண்மை, குடிநீா்த் தேவைகளுடன் தொடா்புடையதாக உள்ளது. வரலாற்றில் முக்கிய நாள்: மழை, வெள்ளம் என இயற்கையின் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் உழைப்பாலும். பொறியாளா்களின் திட்டமிடலாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை, தென்தமிழகத்தின் நீா்வள வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு கனவாகத் தொடங்கி, பல தலைமுறைகளின் முயற்சியைக் கடந்து, மலைகளின் மத்தியில் உருவான அந்தப் பெரும் நீா்த் திட்டத்தின் வரலாற்றை நினைவுகூரும் நாள் செப். 21.