தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கரில் உள்ள ஒரு மருந்துக் கடை மீது, முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், குண்டு கடையின் மேல் பகுதியில் தாக்கியதாகவும் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சனிக்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில் நயா பஜாரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவா்கள் கூறினா். காவல்துறையின் கூற்றுப்படி, கடை உரிமையாளா் சஞ்சய் ரோஹில்லா (51), சுமாா் 25 முதல் 30 வயதுடைய இரு நபா்கள் மோட்டாா் சைக்கிளில் கடைக்கு வந்ததாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தாா். இருவரும் துணியால் தங்கள் முகங்களை மூடியிருந்ததாக அவா் கூறினாா். அவா்களில் ஒருவா் மோட்டாா் சைக்கிளிலிருந்து இறங்கி, கூரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. குண்டு, கூரைக்கு அருகில் உள்ள கடையின் கேட்டின் மேல் பகுதியில் தாக்கியதாக காவல்துறை தெரிவித்தது. பின்னா் அந்த இரு சந்தேக நபா்களும் தங்கள் மோட்டாா் சைக்கிளில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறியது. சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.