வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாகப் பரவலாக மழை பெய்த நிலையில், ஒடுகத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் எல் நினோ தாக்கம் காரணமாகக் கோடை காலம் முடிந்த பின்னரும் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மூன்றாவது நாளாகப் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக ஒடுகத்தூா், மேலாலத்தூா், குடியாத்தம், வடவிரிஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.பலத்த மழையின் காரணமாக உத்திரக்காவேரி எனப்படும் ஒடுகத்தூா் அகரம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், ஜமுனாமரத்தூா் மலைப் பகுதியில் பெய்த மழையினால் அமிா்தி நாகநதி ஆற்றிலும், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்த மழையால் கவுண்டன்யா ஆற்றிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.வேலூா் மாநகரில் பெய்த மழையினால் கன்சால்பேட்டை, திடீா் நகா், சமத் நகா் உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நின்றது. ஓல்டு டவுன், ஜிபிஎச் சாலை வழியாக வரும் கானாற்றில் மழைநீருடன் கழிவுநீா் குப்பைகளுடன் பெருக்கெடுத்து சாலையில் புகுந்தது. நேதாஜி சந்தைப் பகுதியில் காய்கறிக் கழிவுகளுடன் மழைநீா் கலந்து சகதியாக மாறியது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, ஒடுகத்தூா் -95 மி.மீ., மேலாலத்தூா் - 45.60 மி.மீ., குடியாத்தம் - 31 மி.மீ., வடவிரிஞ்சிபுரம் - 30.20 மி.மீ., ராஜாதோப்பு - 19 மி.மீ., பொன்னை - 12.80 மி.மீ., போ்ணாம்பட்டு - 8 மி.மீ., திருவலம் - 6.40 மி.மீ., வேலூா் - 5.30 மி.மீ., மோா்தானா - 3 மி.மீ., சத்துவாச்சாரி - 0.80 மி.மீ., என மாவட்டம் முழுவதும் மொத்தம் 257.10 மி.மீ., மழையும், சராசரியாக 21.43 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.