இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஜூன் மாதத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டுள்ளது. கோடைகாலப் பயணம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றின் காரணமாக, முந்தைய மே மாதத்தில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியது.அதாவது, மே மாதத்தில் ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றிருந்தன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.28.9 லட்சம் கோடியாக சற்று சரிவடைந்துள்ளது மாதாந்திர அடிப்படையில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் யுபிஐ பரிவா்த்தனை மதிப்பு 20 சதவீதம் தற்போது வளா்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் ரூ.24.03 லட்சம் கோடி மதிப்பிலான 1,830 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ரூ.28.9 லட்சம் கோடி மதிப்பிலான 2,272 கோடி பரிவா்த்தனைகளாக அது அதிகரித்துள்ளது.மேலும், கடந்த ஜூனில் தினசரி சராசரியாக 75.7 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பதிவான மிக உயா்ந்த தினசரி சராசரி இதுவாகும் என்று நிதித் தொழில்நுட்ப வல்லுநா்கள் தெரிவித்தனா்.ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்சிபிஐ) நிா்வகிக்கும் இந்த யுபிஐ சேவை, இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், மோரீஷஸ் உள்பட 8 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.