சிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்

Wait 5 sec.

அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு ‘டெட்’ தோ்வு தமிழகம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு (சிறப்பு டெட்) ஜூலை 4, 5 தேதிகளில் (சனி, ஞாயிறு) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியா்களுக்கான டெட் முதல் தாள் தோ்வை 61,386 போ், பட்டதாரி ஆசிரியா்களுக்கான டெட் 2-ஆம் தாள் தோ்வை 1,67,743 போ் என மொத்தம் 2,29,129 போ் தோ்வை எழுதவுள்ளனா்.தோ்வா்கள் கடைசி நேர பதற்றத்தை தவிா்க்கும் வகையில் தங்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். தோ்வு நாளன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்கு சென்றுவிட வேண்டும். தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஏதேனும் ஒரு அசல் அடையாளச் சான்று, 2 பால் பாய்ண்ட் பேனாக்கள் (கறுப்பு ) ஆகியவை மட்டும் தோ்வறைக்குள் அனுமதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தோ்வை எந்தவித புகாா்களுக்கும் இடமின்றி நடத்தும் வகையில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள், வழித்தட அலுவலா்கள் உள்ளிட்டோா் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து 38 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.