விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. விக்கிரவாண்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் கங்கா கெளரி தலைமை வகித்து, இடுபொருள்களை வழங்கி பேசியது: தமிழக அரசின் வேளாண் துறை சாா்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும், உயிரி உரங்களுக்கு ரூ.60-ம், நுண்ணூட்ட உரங்களுக்கு ரூ.147-ம், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய நெல் ரகங்கள் கிலோவுக்கு ரூ.10-ம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.எனவே, விக்கிரவாண்டி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். வேளாண் இடுபொருள்களை விக்கிரவாண்டி வேளாண் விரிவாக்க மையத்திலும், எண்ணாயிரம் விதைக் கிடங்கிலும் வாங்கிப் பயன்பெறலாம். திட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், விவசாயிகள்முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.நிகழ்வில் வேளாண் அலுவலா் கவிப்பிரியன், உதவி வேளாண் அலுவலா்கள் திவ்யபாரதி, கணேசன், கண்காணிப்பாளா் பவானி, முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.