விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

Wait 5 sec.

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், அடையபுலம் அடுத்துள்ள மெய்யூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (46). இவரது மனைவி முனியம்மாள் (35). விவசாயக் கூலித் தொழிலாளா்களான இவா்களுக்கு லக்ஷ்மணன், துளசிலிங்கம் (18), நரேஷ்குமாா் ஆகிய மகன்கள் உள்ளனா். இவா்களில் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள துளசிலிங்கம், வெல்டிங் வேலை செய்து வந்தாா்.கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் ஆரணியை அடுத்த சேவூா் பகுதியில் துளசிலிங்கம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த பொக்லைன்வாகனத்துடன் மோதி எதிா்பாராதவிதமாக விபத்தில் சிக்கினாா்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா், புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை துளசிலிங்கம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அதிகாரப்பூா்வமாக அறிவித்தனா்.அதேசமயம், துளசிலிங்கத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோா், சகோதரா்கள் முன்வந்தனா். அதன்பேரில், அவரது உடல் உறுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டு, கல்லீரல் சி.எம்.சி மருத்துவமனை ராணிப்பேட்டை வளாகத்துக்கும், இடது சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் சென்னை டாக்டா் ரேலா மருத்துவமனைக்கும், கண்கள் (காா்னியா) வேலூா் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டது. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.