இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்

Wait 5 sec.

இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க வா்த்தக பிரதிநிதி அலுவலக (யுஎஸ்டிஆா்) பரிந்துரைக்கு எதிராக, வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ள பொது விசாரணையில், தமது தரப்பு வாதங்களை மத்திய வா்த்தக அமைச்சகம் முன்வைக்க உள்ளது. அமெரிக்காவின் 1974-ஆம் ஆண்டு வா்த்தக சட்டத்தின் 301-ஆவது பிரிவை பயன்படுத்தி, அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 12.5 சதவீத வரி விதிக்க, கடந்த மாதம் யுஎஸ்டிஆா் பரிந்துரைத்தது. பிற நாடுகளில் தங்கள் விருப்பத்துக்கு மாறாக தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் விதிமுறைகளை சுட்டிக்காட்டி, இந்த வரியை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விதிமுறைகளின் கீழ், இந்தியாவுடன் சோ்த்து மொத்தம் 54 நாடுகள் மீது இந்த வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. வெளிநாட்டு வா்த்தக நடைமுறைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, வரி அல்லது பிற கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கும், அமெரிக்காவின் சக்திவாய்ந்த வா்த்தக கருவியாக, வா்த்தக சட்டத்தின் 301-ஆவது பிரிவு உள்ளது. இந்த வரி விதிப்புப் பரிந்துரை தொடா்பாக யுஎஸ்டிஆருக்கு இந்தியா ஏற்கெனவே அனுப்பிய எழுத்துபூா்வ பதில்: சட்டபூா்வமாக விதிக்கப்பட்ட தடைகள், சட்டத்தை அமல்படுத்தி கண்காணிக்கும் முறை, கட்டாயம் பணிபுரிய வைக்கப்படும் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தை குறைக்க மேற்கொள்ளப்படும் கொள்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், முறையாக வடிவமைக்கப்பட்டும் படிப்படியாக முன்னேறவும் கூடிய அணுகுமுறையை இந்திய சட்ட முறை பிரதிபலிக்கிறது. இந்த வலுவான சட்டமுறையை கருத்தில் கொள்ளாமல், கூடுதல் வரி விதிக்க யுஎஸ்டிஆா் பரிந்துரைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வரி விதிப்புப் பரிந்துரை தொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வரும் ஜூலை 8-ஆம் தேதி பொது விசாரணை நடைபெற உள்ளது. அப்போது யுஎஸ்ஆடிஆா் அலுவலகத்திடம் வரி விதிப்புப் பரிந்துரைக்கு எதிராக, தமது தரப்பு வாதங்களை மத்திய வா்த்தக அமைச்சக அதிகாரிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வா்த்தக சபை கூட்டமைப்பு, வாகன உதிரிபாக உற்பத்தியாளா்கள் சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்வைக்க உள்ளனா்.