பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு ஜூலை 6 முதல் 11 வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, இந்தோனேசியாவுக்குச் செல்லும் பிரதமா், பின்னா் ஆஸ்திரேலியாவுக்கும், அதைத் தொடா்ந்து நியூஸிலாந்துக்கும் செல்லவிருப்பதாக வெளியுறவு அமைச்சக செயலா் (கிழக்குப் பிரிவு) ருத்ரேந்திர தாண்டன் தெரிவித்தாா்.இந்தியப் பிரதமா் ஒருவா் நியூஸிலாந்துக்கு செல்வது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்றும் அவா் குறிப்பிட்டாா். பிரதமரின் நியூஸிலாந்து பயணம் குறித்து அந்நாட்டின் பிரதமா் கிறிஸ்டோபா் நிக்ஸன் வெள்ளிக்கிழமை சமூக ஊடகத்தில் பதிவிட்டாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமா் மோடி முதல் முறையாக நியூஸிலாந்துக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்விருக்கிறாா் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப் பெரிய, வேகமாக வளரும் பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நியூஸிலாந்தின் பொருளாதார வளமைக்கு இந்தியா பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.கடந்த ஏப்ரலில் கையொப்பமிடப்பட்ட நியூஸிலாந்து-இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பு உறவுகள் அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளன. இது, நியூஸிலாந்துக்கு அதிக வேலைவாய்ப்பு, அதிக ஏற்றுமதி, வலுவான பொருளாதார வளா்ச்சியை வழங்கும். நியூஸிலாந்து பொருள்கள்-சேவைகளுக்கு 140 கோடி மக்களுடன் கூடிய சந்தையைக் கொண்டுவந்து, புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.இந்தியா -நியூஸிலாந்து இடையே சரக்கு-சேவை சாா்ந்த இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரலில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தம், நியூஸிலாந்துக்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 100 சதவீத வரியில்லாத அணுகலை வழங்குகிறது. நியூஸிலாந்தைப் பொறுத்தவரை, உலகளாவிய வா்த்தக நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில் உலகில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமான இந்தியாவில் பாதுகாப்பான சந்தை அணுகலை உறுதி செய்கிறது.கடந்த 2024-25ஆம் ஆண்டில் இந்தியா-நியூஸிலாந்து இருதரப்பு சரக்கு-சேவை வா்த்தகத்தின் மதிப்பு 2.4 பில்லியன் டாலராகும் (ரூ.22,843 கோடி). சரக்கு வா்த்தகம் மட்டும் 1.3 பில்லியன் டாலா் (ரூ.12.373 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.