சிங்கப் பெண் அதிரடிப் படையினா் முயற்சியால் பள்ளியில் சோ்ந்த 8 குழந்தைகள்

Wait 5 sec.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 குழந்தைகள் கண்டறிந்து அவா்கள் பள்ளிக்குச் செல்ல காரணமாக இருந்த மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மாவட்ட காவல் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுரையின்பேரில், அவளூா் அருகே உள்ள கரிவேடு பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படையினா் மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.அந்நிகழ்ச்சியின்போது பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 குழந்தைகள் கண்டறியப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து குழந்தைகளின் பெற்றோா்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.அதன் பலனாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 குழந்தைகளும் ஜூலை 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அங்குள்ள அரசுப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இந்த சிறப்பான முயற்சியை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி, குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்ளுமாறு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு அறிவுறுத்தினாா்.