முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியின் எம்எல்ஏவும் திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நகரச் செயலர் செல்வம் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் ஆத்தூர் போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்பிணை கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்றபோது அவரை ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவருடன் இருந்த திமுக ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்பிணை மனு தள்ளுபடிDefamatory remarks against the Chief Minister vijay: Anitha Radhakrishnan arrested