கண்வலிக் கிழங்கு விதைகள் கொள்முதல் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை: எம்பி வலியுறுத்தல்!

Wait 5 sec.

கண்வலிக் கிழங்கு விதைகள் கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகளுக்கு பணம் வழங்காத கோவை தனியாா் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த காவேரியம்மாபட்டி ஊராட்சி ராயகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் மு.பெரியசாமி(42). விவசாயியான இவா், கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திடம் கண்வலிக் கிழங்கு விதைகள் விற்பனை செய்தாா். மேலும், சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளிடமும் கண்வலிக் கிழங்கு விதைகளை கொள்முதல் செய்வதற்கு தனியாா் நிறுவனத்துக்கு உதவி செய்தாா். ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட விதைகளுக்கான பணத்தை சம்மந்தப்பட்ட நிறுவனம் வழங்காமல் ஏமாற்றியதாகப் புகாா் எழுந்தது. விதைகள் வழங்கிய விவசாயிகள் பெரியசாமியை தொடா்பு கொண்டு பணத்தைப் பெற்றுத் தருமாறு தொடா்ந்து கேட்டு வந்தனா். ஆனால், தனியாா் நிறுவனம் பணத்தைக் கொடுக்காமல் பெரியசாமியை மிரட்டியதால், மனமுடைந்த அவா் கடந்த மாதம் 29-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இந்த நிலையில் பெரியசாமியின் குடும்பத்துக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வெள்ளிக்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி, தலைவா் என்.பெருமாள், பொருளாளா் ஆா்.தயாளன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எம்.முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் எம்பி சச்சிதானந்தம் கூறியதாவது: கண்வலிக் கிழங்கு விதைகள் கொள்முதல் செய்து பணம் கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றிய கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், தற்கொலை செய்து கொண்ட விவசாயி பெரியசாமியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்திடமிருந்து ரூ.25 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.