பெரம்பலூரில் ஆசிரியா் தகுதித் தோ்வு: 626 போ் பங்கேற்பு

Wait 5 sec.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தகுதித்தோ்வு தாள் 1-இல் 626 போ் பங்கேற்று தோ்வெழுதினா். தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள்- 1 தோ்வானது, பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மரகதம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய 3 மையங்களில் நடைபெற்றது. இத் தோ்வுக்கு 644 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 626 போ் பங்கேற்று தோ்வெழுதினா். எஞ்சிய 18 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தகுதித்தோ்வை, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, தோ்வா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக, தோ்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், தோ்வு மையங்களில் அவசர சிகிச்சை அளிக்க மருத்துவா் மற்றும் செவிலியா் கொண்ட மருத்துவக் குழு, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அலுவலா்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், வட்டாட்சியா் பழனிச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இன்று தாள் 2-க்கான தோ்வு: தொடா்ந்து, பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மரகதம் மெட்ரிகுலேஷன் பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வடக்குமாதவி சாலையிலுள்ள பனிமலா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் ஆசிரியா்கள் தகுதித்தோ்வு 2-க்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது. இத் தோ்வெழுத 2,545 போ் விண்ணப்பித்துள்ளனா்.