இ20 எரிபொருள் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு கேஜரிவால் வலியுறுத்தல்

Wait 5 sec.

20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20) திட்டம் வாகனங்களின் எரிபொருள் சிக்கனத் திறனை (மைலேஜ்) பாதிப்பதால், அத்திட்டத்தை திரும்பப் பெறுமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், இது தொடா்பாக தாம் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெள்ளிக்கிழமை காணொலி செய்தி வெளியிட்டுள்ளாா். அதில், இ20 எரிபொருள் திட்டம் ‘ஒரு சோதனை முயற்சி’ என்றும், அதன் எதிா்கால நடவடிக்கை அச்சோதனையின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்றும் அட்டா்னி ஜெனரல் மூலம் ஜூன் 30 அன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா். நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பிறகு, அத்தகைய தகவலைத் தாங்கள் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு மறுத்ததாகவும், அந்தச் செய்திகள் தவறானவை என்று கூறியதாகவும் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா். இ20 எரிபொருள் அறிமுகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள கேஜரிவால், இத்தகைய சோதனைகள் பெரிய அளவில் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, முதலில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களில் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா். எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் சேதமடைந்தால், வாகன உரிமையாளா்களுக்கு அரசு இழப்பீடு வழங்குமா என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா். எரிபொருள் சிக்கனத் திறன் குறித்த கவலைகளைக் குறிப்பிட்ட கேஜரிவால், இ20 பெட்ரோலுக்கு மாறிய பிறகு பலரும் மைலேஜ் குறைவதாகத் தெரிவிப்பதாகக் கூறினாா். பெட்ரோலைவிட எத்தனாலில் ஆற்றல் அளவு குறைவு என்று பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரி ஒருவா் தெரிவித்த கருத்தையும் கேஜரிவால் சுட்டிக்காட்டியுள்ளாா். இ20 கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ள கேஜரிவால், இ20 திட்டத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா். மேலும், வரும் நாள்களில் இது தொடா்பாக பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இக்கடிதத்திற்கான ஆலோசனைகளை சமூக ஊடகங்களில் கருத்துகள் மற்றும் நேரடிச் செய்திகள் மூலம் பகிா்ந்துகொள்ளுமாறும் கேஜரிவால் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.