கேரளத்தில் பிஎம்-ஸ்ரீ திட்டம் அமலாகுமா? - மாநில அமைச்சா் பதில்!

Wait 5 sec.

பிரதமரின் வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பள்ளிகள் (பிஎம்-ஸ்ரீ) திட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து, சிறப்பு அமைச்சரவை துணைக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகே முடிவு செய்யப்படும் என்று மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுதீன் தெரிவித்துள்ளாா். கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்தபோது, அந்த மாநிலத்தில் பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும் அந்த முன்னணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளின் எதிா்ப்பு காரணமாக, அந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு நிறுத்திவைத்தது. இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, தற்போது கேரளத்தில் ஆட்சியமைத்துள்ளது. ஆட்சிக்கு வந்த பின்னா், அந்தத் திட்ட விவகாரத்தை ஆராய சிறப்பு அமைச்சரவை துணைக் குழுவை காங்கிரஸ் அரசு அமைத்தது. இது குறித்து கோழிக்கோட்டில் அமைச்சா் என்.ஷம்சுதீன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிஎம்-ஸ்ரீ திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் முந்தைய இடதுசாரி அரசு கையொப்பமிட்டு, அதை அமல்படுத்துவோம் என்று மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளித்தது. இதுவே தற்போது இந்த விவகாரத்தின் பின்னணியாகும். இந்தச் சூழலில், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆராய்ந்து வருகிறது. கேரளத்தில் பிஎம்-ஸ்ரீ திட்டம் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சிறப்பு அமைச்சரவை துணைக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகே, மாநில அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தாா்.