கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப். 9-இல் முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Wait 5 sec.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் நடராஜ முருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 9 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், தடகளம், இறகுப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, கேரம், சதுரங்கம், கபடி, கையுந்துப் பந்து, கைப்பந்து, ஹாக்கி, கோ-கோ, யோகா, கிரிக்கெட், கால்பந்து, சிலம்பம், ஸ்பீட் ஸ்கேட்டிங், நீச்சல், மேசைப்பந்து, எறிபந்து, அடாப்டெட் வாலிபால் என மொத்தம் 22 விளையாட்டுப் போட்டிகள் கிருஷ்ணகிரி, ஒசூா் விளையாட்டு வளாகம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்திகுப்பம் கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்திலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04343-291 727 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். மேலும், ஆடுகளம் தகவல் தொடா்பு மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா், தெரிவித்துள்ளாா்.