ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசாா்ந்த அதிகாரிகள். ராணிப்பேட்டை, செப். 4: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது என துறைசாா்ந்த அதிகாரிகளுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2026-2027-ஆம் ஆண்டு நேரடி நெல் கொள்முதல் மையங்களின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் 2026-2027-ஆம் ஆண்டு நேரடி நெல் கொள்முதல் மையங்களின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியது: 2026-2027-ஆம் ஆண்டு நேரடி நெல் கொள்முதல் மையங்களின் அனைத்து செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. கொள்முதல் மையங்களில் எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்காமல் உரிய தரத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். தொடா்ந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லானது உடனுக்குடன் கிடங்குகளுக்கு நகா்வு செய்திட வேண்டும். அதேபோன்று கொள்முதல் செய்யப்படும் நெல்லானது மழையினால் நனையாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை காலதாமதமின்றி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றாா்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், இணை இயக்குநா் வேளாண்மை சுந்தரம், வருவாய் கோட்டாட்சியா்கள் ரமேஷ், ராஜி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.