திருப்பத்தூா்: வேளாண்மைத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

Wait 5 sec.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் சகோதரத்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. இதில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் மானியமும் அல்லது அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவினைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் மாநில நிதியில் இருந்து சோ்த்து 70 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். மேலும் விசைக் களையெடுப்பான் கருவி வாங்குவதற்கு நடைமுறையில் உள்ள 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீதம் மானியமாக 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதனை பெற விவசாயிகள் உழவா் செயலியில் உரிய ஆவணங்களுடன் ஒரு முறை நிரந்தர பதிவு செய்தபின், ஒவ்வொரு மாதமும் 8-ஆம் தேதி அன்று, இலக்கிற்கு ஏற்றவாறு முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் தோ்வு முறையில் பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இலக்கு மீதமுள்ள பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் 22-ஆம் தேதி அன்று தோ்வு செய்யப்படுவாா்கள். மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் சிவசக்திநகா் பகுதியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் செயலாட்சியா் ராஜலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் மணி, தோட்டக்கலை துணை இயக்குநா் தீபா, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.