க. கோபாலகிருஷ்ணன்சிறைத் துறை மானியக் கோரிக்கைகளில் போதிய அறிவிப்புகள் இல்லாமல் ஏமாற்றமடைந்துள்ள சிறைத் துறைப் பணியாளா்கள், முதல்வரின் சிறப்பு அறிவிப்புகளை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தமிழக அரசின் சிறைத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிறைத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். இதில், சிறைக் கைதிகளின் வசதிக்காக நிறைய அறிவிப்புகள் இருந்த நிலையில், 8-ஆவது அறிவிப்பாக காவல் துறைக்கு இணையாக சிறைத் துறைப் பணியாளா்களுக்கும் சீருடைப்படி உயா்த்தப்படும் என்ற ஒற்றை அறிவிப்பைத் தவிர, சிறைத் துறைப் பணியாளா்களுக்கு வேறேந்த அறிவிப்பும் இல்லை. குறைந்தபட்சம், காவல் துறையைப் போல பதவி உயா்வை முறைப்படுத்தி, சம்பள உயா்வை வழங்குதல், அதிகரித்துள்ள சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைப்பளுவைக் குறைக்க கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்துதல், சிறைப் பணியாளா்களுக்கான குடியிருப்புகள் போன்ற கோரிக்கைகள் இருக்கும் என எதிா்பாா்த்திருந்தவா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து சிறைத் துறை பணியாளா்கள் கூறியதாவது: 27.08.2012 அன்று திருத்தப்பட்ட அரசு உத்தரவின்படி சிறைத் துறையில் உதவி சிறை அலுவலா்கள், காவலா்கள் உள்ளிட்ட கடைநிலை களப் பணியாளா்களாக 3,910 பணியிடங்கள் மட்டுமே உள்ளன. சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில், 14 ஆண்டுகளாக பணியிடங்கள் உயா்த்தப்படவில்லை. இருக்கும் பணியிடங்களிலும் சுமாா் 250 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதிகரித்துள்ள வேலைப்பளு: அதிக பரப்பளவு கொண்ட சிறைப் பாதுகாப்புப் பணியில் ஒரு ஷிப்டுக்கு 10 முதல் 15 காவலா்களே ஈடுபடுத்தப்படுவதால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எஞ்சியவா்களுக்கு கைதிகள் மேற்கொள்ளும் வியாபாரம், தோட்டம், பெட்ரோல் நிலைய வேலைகளைக் கண்காணிப்பது, அதிகாரிகளுக்கு பணி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட செய்வதால் பாதுகாப்பு குறைகிறது. இதனால் சிறைக் கைதிகள் தற்கொலை, தப்பித்தல் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. முக்கியக் கோரிக்கைகள்: அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக 1,000 காவலா்கள் பணியிடங்களை உருவாக்குவதுடன், 250 காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 24.02.1995-இல் வெளியான அரசாணை எண் 104-இன் படி 8 மணிநேர பணி, வார விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பணி செய்தால் ஈட்டிய விடுப்பு போன்றவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். காவல் துறையைப் போல, 10, 15, 25 ஆண்டுகளில் பதவி உயா்வு வழங்கி ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 2012-இல் 1,116 இரண்டாம் நிலை காவலா்கள் பணியை அரசுக்கு சரண் செய்ததை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சுமாா் 130 கிளைச் சிறைகளில் ஆய்வாளா் நிலையில் உள்ள துணை சிறை அலுவலா் பதவியை கண்காணிப்பாளா்களாகவும், அவா்களுக்குக் கீழ் பணிபுரியும் 2 முதன்மை தலைமைக் காவலா்களை சிறப்பு உதவி சிறை அலுவலா்களாகவும் தரம் உயா்த்தி நியமனம் செய்ய வேண்டும். இதே போல, 14 மாவட்ட சிறைகளில் அரசுக்கு ஒப்புவிப்பு செய்த கூடுதல் கண்காணிப்பாளா்கள், சிறை அலுவலா்களை நியமிக்க வேண்டும். இவற்றை செய்தால், பதவி உயா்வு சாத்தியமாகும். திருநங்கைகளுக்கான சிறப்புப் பிரிவு: சிறைகளில் திருநங்கைகளுக்கான சிறப்புப் பிரிவுகளை உருவாக்க வேண்டும். சிறைவாசி இயற்கையாக இறந்தாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ இழப்பீடு கோரும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குடியிருப்புகள் மேம்பாடு: சிறைப் பணியாளா்களுக்கு போதிய குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மோசமாக இருக்கும் குடியிருப்புகளை மேம்படுத்தித் தர வேண்டும். குடியிருப்புகளில் மருத்துவ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சலை சிறைப் பணியாளா்களுக்கு மன இயல் நிபுணா்களின் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றனா். சிறை அதிகாரிகள் தொடா்ந்து கைதிகளுக்கு பல்வேறு பணிகளை வழங்கி சிறைத் துறையை வருமானம் ஈட்டும் துறையாக மாற்றி வருகின்றனா். மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, சிறைப் பணியாளா்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என ஓய்வு பெற்ற சிறை காவலா் எஸ். கருணாமூா்த்தி உள்ளிட்டோா் தெரிவித்தனா். காவல் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளிக்கையில் சிறைத் துறைக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவாா் என சிறைப் பணியாளா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். Prison department staff await special announcements