கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி; காலை 8 மணி. தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் தஞ்சாவூர் காவல்துறையினரும் கூடுதலாக சென்னை காவல்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டிருந்தனர். அவரைக் கைதாகக் கேட்டுக்கொள்கிறார்கள். அவர் உடனடியாகக் கைதாகவில்லை. தன்னுடைய வழக்கறிஞர்களோடு விவாதிக்கிறார். தலைவர்களின் கண்டன அறிக்கைகள் வெளியாகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் தலையீடு செய்கிறது. 3 மணி நேரம் காத்திருந்து; அவரை விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர். இறுதியில், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுகிறார். தன்னுடைய மாண்பிற்கும் சுயமரியாதைக்கும் காவல் துறையினரால் எந்தவகையிலும் கேடு நேர்ந்திடக் கூடாது என்பதில் உதயநிதி ஸ்டாலின் கவனமாக இருந்திருக்கிறார். அது அவருடைய உரிமை. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அவருடைய வழக்கறிஞர்கள் சரியான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி, அவரை வழிநடத்தினார்கள். அண்மையில் வீரமலை என்ற கூலித்தொழிலாளி எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். கரூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் இடையபட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது மகன் தனுஷ்குமார் ராமநாதபுரம் சிறையில் இருப்பதாக அவரது நண்பர்கள் சொன்னதாகக் கூறினார். எந்தக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்? எந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்?, எந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்? என்ற விபரம் எதுவும் வீரமலைக்கு தெரியவில்லை. பெற்றோர் என்ற முறையில் ‘தங்களது மகன் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தனக்கோ அல்லது அவரது மனைவிக்கோ காவல் துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை’ என்கிறார். அவருடைய கண்களில் அச்சம் பரவியிருந்தது. இத்தகைய நிலை வீரமலைக்கு மட்டுமானதல்ல. அரசியல் அதிகாரம் இல்லாத அனைத்துக் கைதிகளுக்குமான நிலையும் இதுதான். சுதந்திரம் என்பது அச்சமற்ற தனிமனித வாழ்வை உள்ளடக்கியது. அது சுயமரியாதையோடு இணைந்த ஒன்று. இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழ் நிலத்தில் சுயமரியாதைக்கென நீண்ட வரலாறுகள் உண்டு. கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் என்னும் ஊர், சங்க இலக்கியத்தில் திருப்போர்புறம் என்று பதிவாகி இருக்கிறது. இங்குதான் சோழன் செங்கணானுடன் நடைபெற்ற போரில் மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை கைதுசெய்யப்படுகிறார். சிறையில் தண்ணீர் கேட்கிறார். காவலர்கள் தாமதமாகத் தண்ணீர் கொடுக்கிறார்கள். அந்தக் காலதாமதத்தைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதுகிறார். உண்ணாநோன்பு இருந்து சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையிலேயே உயிர் துறக்கிறார். இந்தக் காட்சியைப் புறநானூற்றுப் பாடல் விவரிக்கிறது. தான் கைது செய்யப்பட்டதற்கோ, நாடு இழந்ததற்கோ கலங்காதவர், தண்ணீர் கொடுக்க ஏற்பட்ட காலதாமதத்தை மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறையால் ஏற்க இயலவில்லை. அது தனது சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்காகக் கருதி மாண்டுபோகிறார். மன்னனின் மரணம் என்பது வெறும் கதை அல்ல. மனித மாண்பிற்கான விலை. அந்தக் கால மன்னனில் ஆரம்பித்து, இந்தக் கால சாதாரணக் குடிமகன் வரை சுயமரியாதையை உயிரைவிட மேன்மையானதாகக் கருதுகின்றனர். நீதிமன்ற ஆணைக்குக் கீழ்ப்படியக் கட்டாயப்படுத்துதல்; அல்லது ஒரு குற்றம் செய்வதைத் தடுப்பதற்காகவோ, குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது சந்தேகத்திற்கு உள்ளானவர் நீதிமன்றத்தின் முன்வந்து பதில் அளிப்பதை உறுதி செய்யும்பொருட்டோ, ஒருவரின் உடற் சுதந்திரத்தை உரிய அதிகாரம் பெற்றவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதைக் கைது (Arrest) என சட்டம் வரையறை செய்கிறது. இதைப் புரிந்துகொண்டால் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஒருவர் நிரபராதி என நிரூபிப்பதற்கு சட்டம் வழங்கியுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாகவே கைது என்ற பெயரில் அவர் தண்டிக்கப்படுகிறார். சட்டவிரோதமான ஒவ்வொரு கைதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிமனிதனின் கண்ணியமான வாழ்வைச் சீர்குலைப்பதாகவே அமைகிறது. கைது செய்யப்படும் நபர்களுக்கான உரிமைகளைச் சட்டம் பாதுகாக்கிறது. ஆனால், நடைமுறையில் கைதிகளுக்கான உரிமைகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன. தனிமனிதனுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கைகள் என்பது சட்டம் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும். அது நபர் சார்ந்து தன்னிச்சையானதாகவோ விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டதாகவோ இருக்கக் கூடாது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் கைது நடவடிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பிறப்பித்துள்ளன. தனது வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என பல்வேறு வழக்குகளில் வலியுறுத்துகின்றன. அதில் மிக முக்கியமான வழக்கு, டி.கே. பாசு /எதிர்/ மேற்கு வங்க அரசு. மேற்கு வங்க மாநிலத்தின் சட்ட உதவி சேவைகளுக்கான நிர்வாகத் தலைவர் டி.கே. பாசு, காவல் நிலையங்களில் அதிகரித்து வரும் கைதிகளின் மரணங்கள் குறித்து 1987ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம், டி.கே. பாசு /எதிர்/ மேற்கு வங்க அரசு என்ற வழக்காகப் பட்டியலிடப்பட்டது. முழுமையான விசாரணைக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு காவல்நிலையங்களுக்கான 11வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்தது. 1. கைது செய்யும் மற்றும் விசாரணை நடத்தும் காவல் துறையினர் தங்களின் பெயர், பதவி பொறிக்கப்பட்ட அடையாள வில்லைகளை அணிந்திருக்க வேண்டும். 2. கைது செய்யப்படும் நேரம், தேதி மற்றும் வழக்கு விவரங்கள் அடங்கிய கைது குறிப்பாணை உடனடியாகத் தயாரிக்க வேண்டும். அதில் குடும்ப உறுப்பினர் அல்லது அப்பகுதி முக்கிய நபர் சாட்சியாகக் கையெழுத்திட வேண்டும். 3. கைது செய்யப்பட்டவர் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ளவர் பற்றிய தகவலை அவரது உறவினர் அல்லது நலம் விரும்பிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்யப்பட்டவர் வைக்கப்பட்டிருக்கும் இடம் பற்றியத் தகவலை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 5. கைது செய்யப்பட்டவருக்கு உள்ள சட்ட உரிமைகள் குறித்து அவருக்குத் தெரிவிக்க வேண்டும். 6. கைது செய்யப்படும்போதே கைதான நபருக்கு உடல்நலப் பாதிப்புகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்து அதைப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் ஒருமுறை தகுதியான மருத்துவரைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். 7. கைது செய்யப்பட்டவர், 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களுடன் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த வேண்டும். 8. விசாரணையின்போது கைது செய்யப்பட்டவர் தனது வழக்கறிஞரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும். 9. கைது செய்யப்பட்டவரின் விவரத்தை 12 மணி நேரத்திற்குள் மாவட்ட அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். 10. விசாரணை செய்யும் காவலர்களின் விவரங்கள் மற்றும் கைது விவரங்களை முறையான பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். 11. விசாரணையின்போது கொடூரமான அல்லது மனிதநேயமற்ற முறைகளைப் (Third-degree methods) பயன்படுத்தக் கூடாது. இந்த 11 வழிகாட்டு நெறிமுறைகளும் காவல் நிலையங்களில் வெளிப்படையாக மக்களின் பார்வைக்கு எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனால் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும், காவல் நிலைய மரணங்களும் சித்ரவதைகளும் தொடர்கின்றன. பொதுவாக, குற்றவியல் நடவடிக்கைகள் என்பது சீர்திருத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால், நடைமுறையில் அச்சம் தருவதாக இருக்கிறது அல்லது பழிவாங்கும் தன்மை உடையதாக இருக்கிறது. காவல் துறையில் உள்ள கடைநிலைக் காவலர்கள்கூட தமக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகக் கருதிக்கொள்கிறார்கள். சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ், மடப்புரம் அஜித் போன்றவர்களின் காவல் நிலையப் படுகொலைகள் அதைத்தான் சொல்கின்றன. இந்தச் சமூகம் நாகரிகச் சமூகம்தானா? என்ற கேள்வி எழுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான புகார்கள் காவல் நிலையங்களுக்கு வருகின்றன. பெரும்பாலான புகார்கள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. பெற்றுக்கொள்ளப்படும் சில புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில்லை. புகார் கொடுப்பவர்களின் தகுதி அல்லது புகாருக்கு உள்ளானவர்களின் தகுதி அடிப்படையில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தவிர்க்க இயலாத நேரங்களில் புகாரின் அடிப்படையில் சி.எஸ்.ஆர். (Community Service Register) பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் குற்றம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை செய்ய முடியாது. சம்பவம் நடந்துள்ளதா என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். புலன் விசாரணை செய்ய வேண்டும் என்றால்; முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கும் புலன் விசாரணைக்கும் (Enquiry and Investigation) உள்ள வேறுபாட்டை உணர மறுத்து, ஒருவரைத் தடுத்து வைக்கும்போதுதான் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. சட்ட விரோதமான விசாரணைகளில் சிக்கிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் மனரீதியாக, உடல்ரீதியாக, பொருளாதார ரீதியாக, உறவுகள் ரீதியாக மறக்கவே முடியாத பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றனர். அதில் அவர் மட்டுமல்ல அவரைச் சார்ந்தோறும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதையெல்லாம் உணர்ந்துதான் தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றங்கள் போராடி வருகின்றன. கைதிகளுக்கான உரிமைகள் தொடர்பாக அரசிற்கு புதிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றங்கள் பிறப்பித்து வருகின்றன. இருந்தபோதிலும், கைது என்ற பெயரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அத்தகைய சம்பவங்கள் மனித மனங்களை மட்டுமல்ல ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைக்கின்றன. கொடிய பசியைக்கூட தாங்கிக்கொள்ளும் மனிதர்கள், தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைத் தாங்கிக் கொள்வதில்லை. எதிர்த்துப் போராடுகிறார்கள் அல்லது தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நெக்குருகித் தேய்ந்துபோகிறார்கள். சுயமரியாதை என்பது அனைத்து உயிர்களுக்குமான உலகளாவியக் கோட்பாடு. மனிதர்களைப் பொருத்த அளவில் அது சுவாசத்திற்கு இணையானது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகள் இல்லை. சுயமரியாதைக்காக மனிதன் எந்த விலையையும் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றான். சுயமரியாதையின் பரிணாம வளர்ச்சிதான் மனித உரிமைகள் குறித்தான உலகளாவிய கோட்டுபாடுகள். ஜனநாயக நாட்டில் மனித உரிமைக் கோட்பாடுகள் நாளுக்கு நாள் செழுமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மனித உரிமைக் கோட்பாடு என்பது அரசு தொடர்பானது. அதிகாரம் தொடர்பானது. தனிநபர்களுக்கு எதிராக மனித உரிமைக் கோட்பாட்டை நிறுவ முடியாது.கைது செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் அவர் கைது செய்யப்படுவதற்கான காரணங்களை முறையாகவும் அர்த்தமுள்ள வகையிலும் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் தகவல் தெரிவித்ததைப்போல ஆவணங்கள் பராமரிக்கப்படும். அது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாகவே இருக்கும். உண்மையில் தகுதியான நபர்களுக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்காது. அவ்வாறு முறையாகத் தெரிவிக்கத் தவறுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(1) மற்றும் BNSS-2023, பிரிவு 47 (குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 50) ஆகியவற்றை மீறுவதாகும். விஹான் குமார் /எதிர்/ ஸ்டேட் ஆப் ஹரியாணா (2025) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்ட நபருக்கு அவரால் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கைதுக்கான காரணங்கள் நேரடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. கைதான நபரைச் சார்ந்தோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடு. ‘ஒரு கைதின் தொடக்கம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றால்; அதனைத் தொடர்ந்து பிறப்பிக்கப்படும் நீதிமன்றக் காவல் உத்தரவுகளும் சட்ட விரோதமானவைதான்’ என்று உச்ச நீதிமன்றம் வரையறை செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(2) மற்றும் BNSS-2023, பிரிவு 58 (குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 57) ஆகியவற்றின்படி கைதுக் குறிப்பில் கைது செய்யப்பட்ட நேரத்தினை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பயண நேரம் தவிர்த்து, கைது செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் உள்ளுர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும். கைதியின் தனிமனித உரிமை எவ்வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் நீதிமன்றங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21, வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்தரத்திற்கான உத்தரவாதத்தைத் தருகிறது. மேனகா காந்தி /எதிர்/ யூனியன் ஆப் இந்தியா (1978) வழக்கில் பிரிவு 21 குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22, கைது மற்றும் தடுப்புக்காவல் இரண்டையும் வரையறை செய்கிறது. விசாரணைக்காக ஒருவரை தற்காலிகமாக காவலில் வைப்பது தடுப்புக் காவல் ஆகும். இதில் குறிப்பிட்ட நபர் மீது குற்றம் சுமத்தப்படுவதில்லை. ஆனால், ஒரு குற்றம் நடந்திருக்கலாம் என்ற காரணத்துடன் காவல்துறையின் முறையான காவலில் வைப்பது ஆகும். கைது என்பது காவலில் வைப்பதில் இருந்து வேறுபட்டது. சாதாரண காயம் ஏற்படுத்துதல், அவதூறு போன்ற புலன் விசாரணைக்குள்பட்ட குற்றங்களில் கைது செய்வதற்குப் பிடியாணை தேவைப்படுகிறது. அதேசமயம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற புலன் விசாரணைக்கு உள்பட்ட குற்றங்களில் பிடியாணை இல்லாமலேயே ஒருவரைக் கைது செய்ய முடியும். அர்னேஷ் குமார் /எதிர்/ ஸ்டேட் ஆப் பிகார் (2014) வழக்கில், ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்கக்கூடிய குற்றச்சாட்டுகளில், கைது நடவடிக்கை என்பது விதிவிலக்காக மட்டுமே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவை எதுவும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை.ஒரு கைதி எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதில் இருந்துதான் அந்தச் சமூகத்திற்கான நாகரிக அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. பாரபட்சமற்ற விசாரணை அமைப்புகளுக்காக நாம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. விசாரணை என்ற பெயரில் பழிவாங்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தடுக்கப்பட்டாக வேண்டும். தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. கைது செய்யப்பட்டவரின் உடல் நலம், வழக்கின் தன்மைகள், விசாரணையின் போக்குகள், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் போன்றவற்றை, சார்ந்தோர்கள் தெரிந்து கொள்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படையான விசாரணை நடைமுறைகளால் காவல் சித்திரவதைகளை முழுமையாகக் குறைக்க முடியும். இதன் மூலம் சட்டவிரோதமான கைதுகள், காவல் சித்திரவதைகள் தடுக்கப்படும்.குற்றவியல் நீதி அமைப்பில் தனிநபர் சுதந்தரத்தைப் பாதுகாப்பதற்கும் நடைமுறை நியாயத்திற்கும் (Personal liberty and Procedural fairness) நீதிமன்றங்கள் பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகின்றன. சட்டம் தனக்கு வழங்கியுள்ள உரிமைகளைத் தெரிந்துகொள்பவர்களால் மட்டுமே தனக்கான நீதியை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்; மன வலிமை பெற முடியும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதைப் புரிந்து கொள்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். நீதிக்கான குரல் ஒலிக்கும்...நியாயத்திற்கான பயணம் தொடரும்...கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்advocatetamilmani@gmail.com ot everyone who is arrested is guilty! Justice and Fairness – 3பூர்வகுடி இனக்குழுக்களே முதல் விடுதலைப் போராட்ட வீரர்கள்! நீதியும் நியாயமும் - 2