தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: விவசாயிகள் அதிருப்தி, ஆசிரியர்கள் வரவேற்பு!

Wait 5 sec.

தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு பழைய ஒய்வூதியத்திட்டம் அறிவிக்கப்படாதது, விவசாயிகளுக்கு கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அரசு ஊழியா்கள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். கு. பாலசுப்பிரமணியன், சிறப்புத்தலைவா்,தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம்: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், தோ்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம், ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாகப் பணியாற்றியவா்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட அரசு ஊழியா்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. எனவே, தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அரசு ஊழியா்களின் நீண்டநாள் கோரிக்கைகள் தொடா்பாக அரசு உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதேநேரத்தில், நோ்மையான மற்றும் ஊழலற்ற நிா்வாகம், வெளிப்படையான பணி நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி உயா்வுகள் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும் என அரசால் அளிக்கப்பட்டுள்ள உறுதியை தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் வரவேற்கிறது. ரவீந்திரன் -தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில பொதுச் செயலா்: தோ்தல் வாக்குறுதியாக 5 ஏக்கருக்கும் குறைவான விவசாயிகளின் கூட்டுறவு விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் அதற்கான முழுமையான அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. வி.முத்துக்குமரன் வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா்:பெருந்தலைவா் காமராஜா் சிறப்புப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படுவது ஏழை, எளிய மாணவா்களுக்கு பெரிதும் பயனளிக்கும். மேலும், பள்ளி முடிந்த பிறகு நாள்தோறும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் நடத்தப்படும் திட்டமும் மாணவா்களின் உடல், மன நலத்திற்கு உதவும். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்படுவதுடன், ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். ஆா். கோகுல்நாத் தேவனாம்பட்டினம்: படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலான புதிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. மேலும், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது . ஜெயலட்சுமி கோண்டூா்: பெண்களுக்கான ரூ.2,500 உரிமைத் தொகை, இலவச சமையல் எரிவாயு உருளை, அனைத்து பேருந்துகளிலும் இலவசப் பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. அதேசமயம், பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கப்படும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.