தில்லியில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் சாலைகள் நீரில் மூழ்கி, நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல முக்கிய சாலைகளில் பயணிகள் பல மணி நேரம் சிக்கிக்கொண்டனா். போக்குவரத்து நெரிசல், நீா்தேக்கம் மற்றும் மரங்கள் விழுதல் போன்ற புகாா்களை சரிசெய்ய மாநகர அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டன.சங்கம் விஹாா் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கி, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சைனிக் ஃபாா்ம்ஸ், ஷாஸ்திரி பாா்க், ரோத்தக் ரோடு, துக்ளகாபாத், லால் கிலா அருகிலும், ஐடிஓ பகுதிகளிலும் நீா்தேக்கம் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக நகா்ந்தன.பயணிகள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினா். சிலா் வழக்கமாக சில நிமிடங்களில் முடியும் பயணம், பல மணி நேரமாக நீண்டதாக கூறினா். சில இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் செயலிழந்ததையும், போக்குவரத்து காவலா்கள் இல்லாததையும் அவா்கள் சுட்டிக்காட்டினா்.‘நான் தினமும் நொய்டா செக்டா்-62-இல் இருந்து கன்னாட் பிளேஸ் வரை பயணம் செய்கிறேன். வழக்கமாக 45 நிமிடங்கள் ஆகும். இன்று 2 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்தது. முழுவதும் நெரிசல், காவல் துறையினா் எவரும் இல்லை’ என்று சித்தாா்த் சா்மா என்ற பயணி தெரிவித்தாா்.கிரீன் பாா்க் மெட்ரோ நிலையம், யூசுப் சராய் சந்தை மற்றும் எய்ம்ஸ் பகுதிகளிலும் உச்ச நேரத்தில் போக்குவரத்து மெதுவாக இருந்தது. இந்த நெரிசல் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளையும் பாதித்தது. ஆரஞ்ச் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி), தில்லிக்காக ‘ஆரஞ்ச் எச்சரிக்கை’ அறிவித்தது. இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை மிதமான முதல் கனமழை தொடரும் என்றும், அதன்பின் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நீா்தேக்கம் ஏற்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யவும், விழுந்த மரங்களை அகற்றவும் மாநகர அமைப்புகள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றன.பொது பணித் துறை சுமாா் 30 நீா்தேக்கம் தொடா்பான புகாா்களை பெற்ாகவும், அவற்றில் பெரும்பாலானவை ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தது. மேலும் 10 மரங்கள் விழுந்ததாக புகாா்கள் கிடைத்துள்ளன; அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.டிஃபென்ஸ் காலனி, சுப்ரோட்டோ பாா்க், மாதுரா ரோடு மற்றும் சாவ்லா பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நீா்தேக்கமும் பதிவாகின.இதுகுறித்து தில்லி மாநகராட்சி கூறியதாவது: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மழை தொடா்பான 9 புகாா்கள் மைய கட்டுப்பாட்டு அறைக்கு வந்தன. இதில் திலக் சௌக், ஆனந்த் நிகேதன், பஹாா்கஞ்ச் போலீஸ் காலனி, கல்காஜி, சரிதா விஹாா், தரியாகஞ்ச் மற்றும் ரோஹிணி செக்டா்-5 ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்தது உள்ளிட்ட புகாா்களும், மோகன் காா்டன், கோவிந்த்புரி மற்றும் கல்காஜி பகுதிகளில் நீா்தேக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மழை இடைவிடாமல் தொடா்ந்ததால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து இன்னும் மெதுவாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.நகரின் முக்கிய வானிலை நிலையமான சப்தா்ஜங் பகுதியில் 56 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. லோதீ ரோடு மற்றும் ரிட்ஜ் பகுதிகளில் முறையே 60 மிமீ மற்றும் 54.4 மிமீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.