நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதிவு செய்த முக்கிய கோரிக்கைகள் மற்றும் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் விவரம் வருமாறு:மக்களவையில்...1) உலகத் தர சுற்றுலா தலமாக கன்னியாகுமரி மாற வேண்டும்!விஜய் வசந்த் (காங்கிரஸ்) விதி எண்: 377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கை வருமாறு: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நவீன சாலைகள், தூய்மையான குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் கடற்கரை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவிலான அரசு சொகுசு விடுதிகள், கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து சேவைகளைத் தொடங்குவது உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும். அறிவியல் ரீதியிலான கழிவு மேலாண்மை மற்றும் கடலோர பாதுகாப்பு மூலம் மாசற்ற சூழலை உறுதி செய்து, சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன கடல்சார் சுற்றுலாத் திட்டங்களுக்கு மத்திய அரசு சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். 2) சென்னை மெட்ரோ திட்டங்கள் விரைவுபடுத்தப்படுமா? தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் தோகன் சாஹு அளித்த பதிலில், "சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 54.62 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 118.9 கி.மீ. தொலைவிலான இத்திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024, அக்டோபர் முதல் இதுவரை ரூ.14,545.91 கோடி மத்திய நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழுமூலம் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3) வீட்டு வசதி திட்டத்தில் தமிழகத்தில் எத்தனை வீடுகள் வருகின்றன? திமுக உறுப்பினர்கள் சி.என். அண்ணாதுரை , டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டர் அளித்த பதிலில், "பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0 திட்டத்தில் தமிழகத்துக்கு 18,577 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 7,083 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 2,334 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு இதுவரை ரூ. 54.61 கோடி மத்திய நிதியும், வட்டி மானியமாக ரூ. 7.44 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4) தமிழகத்தில் புத்தாக்க (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களுக்கான மத்திய அரசின் ஆதரவு என்ன?எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சர் சிராக் பாஸ்வான் அளித்த பதிலில், "தமிழகத்தில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் ஈடுபட்டுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மற்றும் ஹரியாணாவில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகிய தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 2 புத்தாக்க நிறுவனங்களுக்கு பயிற்சி, ஆய்வுக்கூட வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5) சமையல் எரிவாயு சிலிண்டர் சீராக கிடைக்க என்ன நடவடிக்கை?ஏ.மணி (திமுக) எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி அளித்த பதிலில், "தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் 110 எல்பிஜி விநியோகஸ்தர்கள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 2 புதிய விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 15.80 லட்சம் நுகர்வோர்கள் பயன்பெற்று வருகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவையில்...1) தமிழக தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு?பி. வில்சன் (திமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில், "2021-22 இல் ரூ.4,155 கோடியும், 2022-23 இல் ரூ.8,287 கோடியும், 2023-24 இல் ரூ. 9,576 கோடியும், 2024-25 இல் ரூ.7,823 கோடியும், 2025-26 நிதியாண்டில் ரூ.6,587 கோடியும் தமிழக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.2) தென் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்பு உள்ளதா? பிரவீண் சக்கரவர்த்தி (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், "நாட்டில் வெள்ள முன்னறிவிப்பு வழங்கும் முதன்மைப் பொறுப்பு மத்திய நீர் ஆணையத்திடம் உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கும் மழை முன்னறிவிப்புகளின் அடிப்படையில் வெள்ள எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மதுரை, தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மற்றும் கோவையில் நகர்ப்புற வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவ எந்த முன்மொழிவும் வரவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3) போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வேண்டும்!எல்.கே. சுதீஷ் (தேமுதிக) முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பேசுகையில், 'கல்விக்குப் பெயர்பெற்ற தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் தாராளமாகக் கிடைப்பது கவலையளிக்கிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறை (என்சிபி), மாநில காவல் துறை மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.4) பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தத்தைக் குறைக்க தனித் திட்டம் தேவைராஜாத்தி (எ) கவிஞர் சல்மா (திமுக) பேசுகையில், "இந்தியாவில் நான்கில் ஒரு தாய் பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தத்தால் (போஸ்ட்- பார்ட்டம் டிப்ரஷன்) பாதிக்கப்படுகின்றனர். இது பிரசவத்துக்குப் பின்பு தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. இதைக் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க தேசிய தாய்மார்கள் மனநல உத்தியை மத்திய அரசு உருவாக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.