முனைவர் பா. சக்திவேல் ஊருக்கும் மக்களுக்கும் என்ன உறவோ, அதுபோன்ற உறவுதானே ஆற்றுக்கும் கடலுக்கும். அண்மைக்காலமாக ஆற்றுத் தண்ணீரை கடலுக்கு அனுப்பி வையுங்கள் என்பதை கேலியாக சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். கர்நாடக முதல்வர் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு 'தண்ணீர் திறப்பதற்கில்லை, சென்ற ஆண்டு நாங்கள் கொடுத்த நீரை கடலில் கலக்க வைத்து வீணடித்தீர்கள்' என்று தமிழ்நாடு குறித்து விமர்சித்தார்.ஆறு என்ற நீர்வழிப்பாதை இயற்கையில் உருவானதே நன்னீர் கடலைச் சேரத்தானே! நதியின் விதியானது முடிந்தவரை நிலத்தில் அனைவருக்கும் பயன்பட்டுவிட்டு பெருங்கடலில் சங்கமிப்பதுதானே!புவியின் மொத்த மேற்பரப்பில் நான்கில் மூன்று பங்கு பரவிக்கிடக்கும் நீர்வெளியை பெருங்கடலாகவும், கடலாகவும் பார்க்கிறோம். கடல் நீர் ஆவியாவதால்தான் பெரும்பகுதி மேகக் கூட்டங்களும், அதன் திசை நோக்கிய பயணத்தில் காற்றழுத்த மாறுபாடுகளும் புயல் காற்றும், பருவமழையும் தரணியெங்கும் உருவாகிறது. இது இயற்கை கொடுத்த வரமல்லவா?இந்த கார்முகில் கூட்டங்களின் நகர்வை மழையாக மாற்றும் மந்திரக் கூடங்களாக மலைகள் செயல்படுகின்றனவே! அப்படி உருமாறும் மழைத்துளிகள் சரிவுகளில் சரிந்து ஆறுகளில் பெருக்கெடுத்து, தான் கொண்டு வரும் வளமான வண்டல் படிவுகளை உணவு உற்பத்தி மையங்களான டெல்டாவில் சேர்த்துவிட்டு மீண்டும் கடலைச் சென்றடைகிறது; இது இயற்கையின் சுழற்சி.ஆற்றுநீரின் ஓட்டத்தை இடைமறித்து முற்றாக ஓர் இடத்தில் நிறுத்திவிட்டால் பிறகு அதன் பாதை துண்டிக்கப்படுமல்லவா? ஆற்றுநீர் அதன் வழியில் செல்வதால்தானே ஆறு இன்றும் உயிருடன் இருக்கிறது. அதைத் தடுத்து நீர் முழுவதும் நாம் பயன்படுத்தினால் ஆற்றின் ஒரு பாகம் காணாமல் போய்விடும். ஆறும் கடலும் இணையும் முகத்துவாரத்தில் முற்றிலும் புதுமையான ஒரு பல்லுயிர்த்தன்மை உள்ளது. அந்த உயிர்கள் உப்பு நீரிலும் நன்னீரிலும் வாழும் வரத்தைப் பெற்றுள்ளன.நன்னீரின் வரவைத் தடுத்தால் அதன் வாழ்க்கைக்கு சாபமாகிவிடாதா? ஆற்று நீர் கடலைச் சேராவிட்டால் கடல் நீர் நிலத்தடி வழியாக கடல் ஓரத்தில் பல கி.மீ. தொலைவுக்கு உள்ளே வந்துவிடும் ஆபத்து உள்ளது. இதனால், நிலம் உவர் ஏறி விவசாயத்துக்கும் நுண்ணுயிர் முதல் பேருயிர் வாழ்க்கைக்கும் பயன்படாத நிலை வந்துவிடுமே. அப்போது கடல் ஓரத்தில் இருக்கும் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும்.கடல் ஓரத்தில் இருந்து நிலத்தை அரிமானத்திலிருந்து காப்பாற்றும் அலையாத்திக் காடுகள் முதல் நன்னீர் மீன்கள், பவளப் பாறைகள் என ஆற்றுநீரைச் சார்ந்து கடலிலும் முகத்துவாரத்தில் வாழும் உயிர்களின் எண்ணிக்கை பலகோடி. வளம் நிறைந்த ஆற்று நீருக்காக அதன் சத்துக்காக காத்திருக்கும் ஆழ்கடல் உயிரினங்கள் எண்ணிலடங்காதவை. இவற்றுக்கு சென்று சேரும் அடிப்படை உணவை, உரிமையைத் தடுக்கும் அதிகாரத்தை மனிதனுக்கு யார் வழங்கியது?; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பக் கூறிய வள்ளுவர் பிறந்த மண்ணில் அதுபோல நடக்குமா?, மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? என்றார் மகாகவி பாரதியார். அவர் இந்த நூற்றாண்டில் இருந்திருந்தால் மனிதர் நீரை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? என நொந்திருக்கக்கூடும் அளவுக்கு நீர் பகிர்மான தகராறு ஒருநாட்டு மக்களிடையே தலைதூக்கி வருகிறது.ஆற்றுநீர் கடலில் சேராமல் இருந்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போகும். சால்மன் என்ற வகையைச் சேர்ந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்து தன் குஞ்சுகளைப் பொரிப்பதற்காக கடலில் இருந்து கிளம்பி ஆற்றின் வழியாக சில ஆயிரம் கி.மீ. தொலைவு பயணித்து பாதுகாப்பான இடம் தேடி ஓடைகளில் தன் குஞ்சுகளை உருவாக்கிவிட்டு இறந்துபோகின்றன. பின்பு புதிதாகப் பிறப்பெடுத்த குஞ்சுகள் சில ஆயிரம் கி.மீ. பயணம் செய்து மீண்டும் கடலை அடைகின்றன. ஆறு கடலில் இருந்து துண்டிக்கப்பட்டால் இப்படி பாரம்பரிய வாழ்க்கைப் பயணத்தை அவற்றால் தொடர முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.நம் முன்னோர் உருவாக்கிய ஏரி, குளம், குட்டைகளை மீட்டெடுத்து அவற்றில் நீரைச் சேமித்து தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். ஆற்றுநீரின் பாதையை முற்றாக அடைக்காமல் ஆறுக்கும் கடலுக்குமான நீரோட்டம் சிறிதளவேனும் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். புதுப்புது அணைகள் கட்டிக்கொண்டே இருந்தால் இந்த ஓட்டம் சாத்தியமில்லாமல் போகிறது.வியத்நாம், கம்போடியா, பாகிஸ்தான், இராக், உஸ்பெகிஸ்தான், ஈரான், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் உள்ள டெல்டாக்கள் ஆற்று நீரை முற்றாகத் தடுத்து அணை கட்டியதால் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் நீரின் உப்பு நிலத்துக்குள் வந்ததால், விவசாய நிலங்களில் கணிசமான அளவு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஓராண்டில் சுமார் 2,850 டிஎம்சி தண்ணீர் கோதாவரி ஆற்றில் இருந்து மட்டும் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. ஓராண்டில் சுமார் 22,000 டிஎம்சி தண்ணீர் பிரம்மபுத்ராவிலிருந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.அணை நிரம்பி வழிந்துவரும் தண்ணீரை மட்டும் மனமில்லாமல் தமிழகத்துக்கு அனுமதிக்கும் கர்நாடக ஆட்சியாளர்களும் போராளிகளும் இயற்கையின் நீர்ச் சுழற்சி குறித்தும் நதிநீர் பயண பாதை குறித்தும் புரிந்துகொள்வார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இயற்கையை விஞ்சிய ஆசான் யார் உளர்? அதுவே பாடங்களை நடத்தி தேர்வையும் அவ்வப்போது வைத்து முடிவை அறிவித்து வருகிறது!