மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நஞ்சை ஊத்துக்குளியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொழில் சம்பந்தமாக லாரிகள் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன. அவ்வாறு வெளியில் செல்லும் லாரிகள் மீண்டும் நஞ்சை ஊத்துக்குளிக்கு வரும்போது, வழியில் உள்ள குரங்குகள் லாரிகள் மூலம் அவ்வப்போது நஞ்சை ஊத்துக்குளிக்கு வந்து விடுவதாக கூறப்படுகிறது. இங்கு வரும் குரங்குகள் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து உணவு தானியங்கள், பழங்களை சாப்பிட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு எங்கிருந்தோ வந்த மூன்று குரங்குகள் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளதால் லாரிகள் மூலம் அடிக்கடி குரங்குகள் இங்கே வரும் சிறிது நாள்கள் இங்கேயும் சுற்றித்திரிந்து உணவுப் பொருள்களை சாப்பிட்டு விட்டு மீண்டும் லாரி மூலம் சென்றுவிடும், தற்போது மூன்று குரங்குகள் வந்துள்ளன. வீடுகளின் மொட்டை மாடிகளில் காய வைக்கும் தானியங்களை தின்று விடுகின்றன. பொதுமக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் குரங்குகளை கண்டு அச்சப்படுகின்றனா் என்றனா்.இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.