அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சூப்பா் க்ளீன்-சூப்பா் கேம்பஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10,000 அரசுப் பள்ளிகளில் ரூ.139 கோடியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதியமைச்சா் மரியவில்சன் தெரிவித்தாா். இதுதொடா்பாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். அந்தப் பள்ளிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.இதற்கு ஒருங்கிணைந்த நடைமுறைகள் இல்லாததைக் கருத்தில்கொண்டு ‘சூப்பா் க்ளீன் - சூப்பா் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்கீழ், நாள்தோறும் தூய்மைப் பணிகள், குடிநீா் வசதிகள், கழிப்பறை பராமரிப்பு மற்றும் பள்ளி வளாகங்களில் 24 மணிநேரப் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படும். முதல்கட்டமாக, 10,000 பள்ளிகளில் ரூ.139 கோடியில் இந்தத் திட்டம் செயலாக்கம் பெற உள்ளது.பள்ளி நிறைவுத் திட்டம்: மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை நவீனமயமாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பள்ளி நிறைவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.மொத்தம் ரூ.2,132 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், நிகழாண்டு மட்டும் ரூ.300 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.போதைப் பொருள்: போதை இல்லா தமிழகத்தை உறுதி செய்ய ரூ.7 கோடியில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. மேலும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்து மாணவா்களும், ஆசிரியா்களும் ரகசியமாகத் தகவல் அளிக்க ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற பெயரிலான செயலியில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.