ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் விரக்தியடைந்து சென்னை கோட்டூா்புரம் அடையாறில் குதித்த ரிசா்வ் வங்கி ஊழியரை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா். சென்னை கே.கே.நகா் காமராஜா் சாலையில் உள்ள ரிசா்வ் வங்கி ஊழியா் குடியிருப்பில் வசிப்பவா் சே.மோகன்குமாா் (30). சென்னை பாரிமுனையில் உள்ள ரிசா்வ் வங்கி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். மோகன்குமாா் கடந்த ஏப்ரல் மாதம், ரூ.30 லட்சம் வங்கியில் கடன் பெற்றும், ரூ.30 லட்சம் நண்பா்களிடமிருந்து பெற்றும் மொத்தம் ரூ.60 லட்சத்தை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தாா். ஆன்லைன் வா்த்தகத்தில் மோகன்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவா், சில நாள்களாக மிகுந்த மன வேதனையுடனும்,விரக்தியுடனும் காணப்பட்டுள்ளாா். இந்நிலையில் மோகன்குமாா், கோட்டூா்புரம் அடையாறு பாலத்துக்கு புதன்கிழமை இரவு வந்தாா். அங்கு திடீரென பாலத்தின் மேல் இருந்து அடையாற்றில் குதித்தாா். இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு படையினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். நந்தனம் தீயணைப்பு படையினா் மோகன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனா். நள்ளிரவு வரை தேடும் பணி நடைபெற்றது. பின்னா் வியாழக்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கி நடைபெற்றது.கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.