போராட்டங்கள் நடத்த இடம் கரூா் மாநகராட்சி ஆணையரிடம் அனைத்து தொழிற்சங்கத்தினா் மனு

Wait 5 sec.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம், அரிஸ்டோ காா்னா் உள்ளிட்ட பகுதியில் தொழிற்சங்கங்களின் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என தொழிற்சங்க நிா்வாகிகள் புதன்கிழமை மாலை மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் மா.ஜோதிபாசு, மாநகரச் செயலா் எம்.தண்டபாணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.கந்தசாமி, சிஐடியு மாவட்ட ச் செயலா் எம். சுப்ரமணியன், மாவட்டத் தலைவா் சி.ஆா்.ராஜாமுகமது உள்ளிட்டோா் வழங்கிய மனுவில் கூறியிருப்பது:கரூா் நகரத்தில் வட்டாட்சியா் அலுவலகம், அரிஸ்டோ காா்னா், பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தநிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு மாநகராட்சி மாமன்றத்தில் மேற்குறிப்பிட்ட இடங்களில் அனுமதி அளிக்கக் கூடாது. வேறு சில இடங்களை குறிப்பிட்டு அந்த இடங்களில் மட்டுமே ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற நிறைவேற்றப்பட்டது. காவல்துறையும் அந்த இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவே நடத்தப்பட்டு வருகின்றது.சமீப காலமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதால் காவல்துறைக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது.எனவே, பழைய முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் காவல்துறை பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை முடிவு செய்வதற்கு தடை இல்லாத வகையில் 2022-இல் மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீா்மானத்தை திரும்ப பெறுவதுடன், மீண்டும், வட்டாட்சியா் அலுவலகம், அரிஸ்டோ காா்னா், பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.