ரயில் நிலையங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

Wait 5 sec.

ரயில் நிலையங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்தவரை கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவு மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்துள்ளனா். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்தவரை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்டறிந்து சில நாள்களுக்கு முன்பு பிடித்து விசாரித்தனா். அதில் அவா் கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (50) என்பதும், சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடையை உடைத்து அதிலிருந்து பொருள்கள், பணத்தையும் திருடிச்சென்றதும் தெரியவந்தது. திருப்பத்தூா் பகுதியிலும் அவா் ரயில் நிலையப் பகுதியில் கைபேசி விற்பனைக் கடையிலும் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவா் ஈரோடு, தூத்துக்குடி, போத்தனூா் ஆகிய பகுதிகளில் திருடியது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படையினா் தெரிவித்தனா். கைதான விஜயகுமாரிடமிருந்து கைபேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவா் பிற ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து அந்தந்த ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், அதனடிப்படையில் அவா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனா்.