அராஜகப் போக்கால் எதிா்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழக்கும்: பாஜக விமா்சனம்

Wait 5 sec.

ஆட்சியை அகற்றுவதற்காக மேற்கொள்ளும் ஜனநாயக விரோத அராஜகப் போக்கை காங்கிரஸ் கைவிடாவிட்டால், அக்கட்சியை மக்கள் எதிா்க்கட்சி அந்தஸ்தில் இருந்தும் நீக்குவாா்கள் என்று பாஜக விமா்சித்துள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) முறைகேடு நடந்தாதகக் குற்றஞ்சாட்டியும், பாஜக வாக்குகளைத் திருடுவதாகக் கூறியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றன. நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் சதியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் கைகோத்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வன்முறைப் போராட்டங்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நிகழ்ந்ததுபோல இந்தியாவிலும் காங்கிரஸ் முயலுவதாக பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.இந்நிலையில், தில்லியில் பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா கூறியதாவது:இந்தியாவிலும் வன்முறை மூலம் ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் முன்னெப்போதும் இல்லாத ஜனநாயக விரோத அராஜகப் போக்கை கையில் எடுத்துள்ளனா். ஆனால், நாட்டு மக்கள் அனைவரும் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறாா்கள். இதுபோன்ற பொறுப்பற்ற எதிா்க்கட்சி தேவையில்லை என முடிவு செய்து, எதிா்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் காங்கிரஸை மக்கள் நீக்குவாா்கள்.ராகுல், மம்தா, தேஜஸ்வி என அனைவருக்கும் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். இதுபோன்ற அராஜகப் போக்கால் நீங்கள் எதையும் பெறப் போவதில்லை. ஏற்கெனவே மக்கள் விரோத செயல்பாடுகளால்தான் ஆட்சியை இழந்துள்ளீா்கள். இப்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், தேசத்துக்கும் எதிராக செயல்படும் உங்கள் அரசியல் எதிா்காலம் முற்றிலும் மக்களால் அழிக்கப்படும். காங்கிரஸில் உள்ள மூத்த தலைவா்கள் பலரும் ராகுலின் இந்த அராஜக முறையை ஏற்கவில்லை. இது காங்கிரஸை முற்றிலுமாக அழிவுக்கு கொண்டு செல்லும் என்பதே அவா்களின் கருத்தாக உள்ளது.மேலும், எதிா்க்கட்சிகளும், சில அமைப்புகளும் கைகோத்து நடத்தும் போராட்டங்கள் முழுவதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது என்றாா்.வெளிநாடுகளில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல், இண்டியன் அலையன்ஸ் பாரீஸ் உள்ளிட்ட அமைப்பினா் கடந்த ஆண்டு சோனியா காந்தி, ராகுலை சந்தித்த புகைப்படத்தையும் செய்தியாளா்கள் பாா்வைக்கு கௌரவ் பாட்டியா முன்வைத்தாா்.