வழிகாட்டும் செயற்கைக்கோள்கள்!

Wait 5 sec.

முனைவர் இளங்கோ கட்டிமுத்துநாம் செல்ல வேண்டிய இடத்தை நமது அறிதிறன்பேசிகளிலேயே சில விநாடிகளில் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த மாற்றத்துக்குப் பின்னால் இருப்பது செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொழில்நுட்பம். இந்த வசதிக்குப் பின்னால், பூமியைச் சுற்றி விண்வெளியில் இயங்கிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களின் மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது.அமெரிக்காவின் ஜிபிஎஸ் அமைப்பைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால், இந்தியாவுக்கும் தனக்கென ஒரு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பு உள்ளது. அதுதான் "நேவிக்' (நேவிகேஷன் வித் இந்தியன் கன்ஸ்டலேஷன்).நாம் பூமியில் எந்த இடத்தில் இருக்கிறோம்?, நாம் செல்ல வேண்டிய இடம் எங்கே உள்ளது?, அங்கு செல்வதற்கான வழி எது?, குறிப்பிட்ட இடத்தை எப்போது அடைவோம் போன்ற தகவல்களைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் தொழில்நுட்பமே செயற்கைக்கோள் வழிகாட்டுதல். இதற்காக பூமியைச் சுற்றி வரும் பல செயற்கைக்கோள்கள் தொடர்ந்து சமிக்ஞைகளை அனுப்புகின்றன. நமது அறிதிறன்பேசி அல்லது அதற்கென அமைக்கப்பட்ட கருவிகள் அந்தச் சமிக்ஞைகளைப் பெற்று, நமது இருப்பிடத்தையும் நேரத்தையும் கணக்கிடுகின்றன. இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது 4.10.1957 அன்று சோவியத் ஒன்றியம் விண்ணில் செலுத்திய "ஸ்புட்னிக்-1' செயற்கைக்கோள். மனிதரால் உருவாக்கப்பட்டு பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கைக்கோள் அதுவாகும்.அமெரிக்கா 1958-ஆம் ஆண்டு "டிரான்ஸ்சிட்' என்ற செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பை உருவாக்கத் தொடங்கியது. 13.04. 1960 அன்று "டிரான்ஸ்சிட் 1-பி' வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 1964-ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பு, பின்னர் பொதுப் பயன்பாட்டுக்கும் உதவியது. செயல்பாட்டுக்கு வந்த முதல் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பாக 'டிரான்ஸ்சிட்' வரலாற்றில் இடம்பிடித்தது.இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா 1973-ஆம் ஆண்டு ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) திட்டத்தைத் தொடங்கியது. 1978-இல் முதல் ஜிபிஎஸ் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. 24 செயற்கைக்கோள்களைக் கொண்ட அதன் அடிப்படைக் கட்டமைப்பு 1993-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 1994 முதல் ஜிபிஎஸ் உலகளாவிய பயன்பாட்டுக்கு கிடைத்தது. இன்று உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பாக ஜிபிஎஸ் விளங்குகிறது.ரஷியாவின் 'குளோநாஸ்' அமைப்பு 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1995-இல் 24 செயற்கைக்கோள்களைக் கொண்ட முழுமையான உலகளாவிய சேவையை எட்டியது. சீனாவின் 'பெய்டோ' அமைப்பு முதலில் ஆசிய}பசிபிக் பிராந்தியப் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது. அதன் மூன்றாம் தலைமுறை அமைப்பு 2020 ஜூன் 23 அன்று கடைசி செயற்கைக்கோள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து முழுமையடைந்தது.ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய விண்வெளி முகமையும் இணைந்து உருவாக்கிய 'கலிலியோ' அமைப்பு 15.12.2016 அன்று ஆரம்பச் செயல்பாட்டைத் தொடங்கியது. ஜப்பான் க்யூஇஸட்எஸ்எஸ் (க்வாசி ஜெனித் சாட்டிலைட் சிஸ்டம்) என்ற பிராந்திய வழிகாட்டுதல் மற்றும் நேரச் சேவை அமைப்பை உருவாக்கியது.இந்தியாவின் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் திட்டம் முதலில் 'ஐஆர்என்எஸ்எஸ்' (இந்தியன் ரீஜினல் நேவிகேஷன் சாட்டிலைட்ஸ் சிஸ்டம்) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர், இதற்கு 'நேவிக்' என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்தப் பெயர் இந்தியப் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய 'நேவிக்', இந்தியாவையும் அதன் எல்லைகளுக்கு அப்பால் சுமார் 1,500 கி.மீ. வரையிலான பகுதிகளையும் உள்ளடக்கிய பிராந்திய வழிகாட்டுதல் அமைப்பாகும்.இதன் ஆரம்பகாலக் கட்டமைப்பு ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. அவற்றில் மூன்று புவிநிலைச் சுற்றுப்பாதையிலும், நான்கு புவி ஒத்திசைவுச் சுற்றுப்பாதையிலும் அமைக்கப்பட்டன. இந்த அமைப்பு பொதுமக்களுக்கான சேவையையும், அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் மூலோபாயப் பயன்பாட்டாளர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட சேவையையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.'நேவிக்'-இன் பொதுப் பயன்பாட்டுச் சேவை (ஸ்டாண்டர்டு பொசிஷனிங் சிஸ்டம்-எஸ்பிஎஸ்) என்றும், அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கான சேவை ரெஸ்ட்டிரிக்டட் சர்வீஸ் (ஆர்எஸ்) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு சேவைகளும் எல்}5 (1176.45 மெகா ஹர்ட்ஸ்) மற்றும் எஸ்}பேண்ட் (2498.028 மெகா ஹர்ட்ஸ்) ஆகிய அலைவரிசைகளில் வழங்கப்படுகின்றன.இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டுதல் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில், 30.10.2026 அன்று இரவு 11.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி-எஃப் 18 ராக்கெட் மூலம் 2,232 கிலோ எடையுள்ள என்விஎஸ்}03 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.இது இஸ்ரோவின் இரண்டாம் தலைமுறை வழிகாட்டுதல் செயற்கைக்கோள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இங்கு ஒரு பெயர் வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஐஆர்என்எஸ்எஸ் என்பது திட்டத்தின் தொடக்கப் பெயர். 'நேவிக்' என்பது செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பு. என்விஎஸ்-01, 02, 03 ஆகியவை அந்த இரண்டாம் தலைமுறை வரிசையில் உள்ள தனித்தனி செயற்கைக்கோள்கள்.என்விஎஸ்-03 விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், அது தற்போது திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைவதற்கான சுற்றுப்பாதை நிலைநிறுத்தப் பணிகளில் உள்ளது. இறுதிச் சுற்றுப்பாதையை அடைந்து தேவையான சோதனைகளை முடித்த பின்னரே அதன் முழுமையான சேவைப் பங்களிப்பு தொடங்கும்.'நேவிக்' அமைப்பின் முழுமையான பிராந்தியக் கட்டமைப்பை ஏழு செயற்கைக்கோள்களுடன் நிறைவு செய்வதே இஸ்ரோவின் முதல் கட்ட இலக்காகும். மூன்று செயற்கைக்கோள்கள் இருப்பிடத்தைக் கண்டறியவும், நான்காவது துல்லியமான நேரத்தைப் பெறவும் உதவுகின்றன. ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட கட்டமைப்பு காப்பு வசதி, சேவையின் தொடர்ச்சி, நம்பகத்தன்மை மற்றும் பொதுப் பயன்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு முக்கியமானது.அடுத்தடுத்த கட்டமாக என்விஎஸ்-04, 05 செயற்கைக்கோள்களை தலா ஐந்து மாத இடைவெளியில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அறிதிறன்பேசிகளில் 'நேவிக்' சேவையைப் பயன்படுத்துவதற்கும் ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட கட்டமைப்பு முழுமையடைய வேண்டும். முதல் கட்டமாக ஏழு செயற்கைக்கோள்களின் கட்டமைப்பை நிறைவு செய்த பின்னர், உலகளாவிய சேவையாக விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். உலகளாவிய சேவையை வழங்குவதற்கு ஏழு செயற்கைக்கோள்களைத் தாண்டி கூடுதல் செயற்கைக்கோள்கள் தேவைப்படும்.செயற்கைக்கோள் வழிகாட்டுதல் என்பது வெறும் வரைபடத்தில் வழிகாட்டும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; அது நாட்டின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் பாதுகாப்பிலும் பல்வேறு வகைகளில் உதவுகிறது.வாகனங்கள் எங்கு செல்கின்றன?, அவை எந்த இடத்தில் உள்ளன என்பதை அறிய உதவுகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10,400-க்கும் மேற்பட்ட ரயில் என்ஜின்களில் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொடர்பான வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன.சுமார் 64,000 மீன்பிடிப் படகுகள் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அடுத்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நடவடிக்கைகளுக்கு துல்லியமான இருப்பிட மற்றும் நேரத் தகவல்கள் மிகவும் அவசியம். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'நேவிக்' அமைப்பு இந்தத் தேவையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.கப்பல்கள், விமானங்களின் வழிகாட்டுதல், அவற்றின் இருப்பிடத்தைக் கண்காணித்தல் போன்ற பணிகளுக்கு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் பயன்படுகிறது.இயற்கைப் பேரிடர்களின்போது மீட்புப் பணிகளுக்கு இருப்பிடத் தகவல்கள் உதவுகின்றன. தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளுக்கு ஒருங்கிணைந்த துல்லியமான நேரத் தகவலும் முக்கியமானதாகும்.பலரும் ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் இரண்டும் ஒன்றே என்று நினைக்கிறார்கள்; அவை வேறுபட்டவை. ஜிபிஎஸ் என்பது செயற்கைக்கோள்களிலிருந்து இருப்பிடத் தகவலைப் பெற உதவும் வழிகாட்டுதல் அமைப்பு. கூகுள் மேப் என்பது அந்த இருப்பிடத் தகவலைப் பயன்படுத்தி வரைபடம், சாலை, பயண வழி போன்றவற்றைக் காட்டும் செயலி.அதேபோல், 'நேவிக்' என்பது இந்தியாவின் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பு. எதிர்காலத்தில் அறிதிறன் பேசிகளில் அதன் பயன்பாடு விரிவடையும்போது, இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் தொழில்நுட்பம் பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் அதிகமாகப் பயன்படும்.கட்டுரையாளர்:இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).