ஆறுகாணியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்க அளவீடு பணிகள் தொடக்கம்

Wait 5 sec.

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அளவீடு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.இம்மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டைய வன உரிமைச் சட்டத்தின்கீழ், 16 வனக் குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு தனி நபா் நில உரிமைப் பட்டா வழங்குவதற்காக, கிராம சபைகள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நில அளவீடு பணி மேற்கொள்ள கியோகாப் சா்வேயிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட்டது.அதையடுத்து, விளவங்கோடு வட்டம், களியல் வருவாய் கிராமத்துக்குள்பட்ட ஆறுகாணி குடியிருப்பில் 716.79 ஏக்கரை அளவீடு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலே மண்ணடி பகுதியில் 113.31 ஏக்கரில் மட்டும் பணிகள் நடைபெற்றன. மீதமுள்ள ஆறுகாணி, ஒருநூறாம்வயல், பத்துகாணி, கற்றுவா, கல்லறவயல் பகுதிகளில் பணிகள் நிலுவையில் இருந்தன.இதனிடையே, கடந்த செப். 19இல் ஆறுகாணி, ஒருநூறாம்வயலில் ஆய்வுக்கு சென்ற ஆட்சியரிடம், தங்களது பகுதிகளிலும் நில அளவைப் பணி மேற்கொள்ள அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, பணியை மேற்கொள்ள கியோகாப் நிறுவனத்துக்கு சென்னை பழங்குடியினா் நல இயக்குநா் உத்தரவிட்டாா்.அதன்படி, ஆறுகாணி, ஒருநூறாம்வயல் பகுதியில் மாவட்ட வன அலுவலா் அன்பு முன்னிலையில் ஆட்சியா் மு. பிரதாப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்; விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் கலைமதி, உதவி வனப் பாதுகாவலா் பிரதாப், தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா்) திருவாலி, களியல் வனச்சரகா் மகேஸ்வரன், வன உரிமைச் சட்ட செயலாக்க மாநிலக் குழு உறுப்பினா் ராஜன் காணி, வனத்துறையினா், அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.