தென்காசி மாவட்டம், செங்கோட்டை, பகவதிபுரம் அருகே ரயில் மோதியதில் ஆண் புலி உயிரிழந்தது.குற்றாலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பூலாங்குடியிருப்பு பகவதிபுரம் ரயில் பாதையில் புதன்கிழமை அதிகாலை தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் மோதி 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்தது.தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட வன அலுவலா் ரா.ராஜ்மோகன் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினாா். ரயில் மோதியதில் புலியின் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.இதையடுத்து, வன உயிரினக் காப்பாளரின் பிரதிநிதியாக எஸ்.டி.செல்வராஜா, நிா்வாக அறங்காவலா், அனிமல் கோ் டிரஸ்ட் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய நியமனப் பிரதிநிதி எம்.மதிவாணன் ஆகியோா் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி நிகழ்விடத்தை பாா்வையிட்டனா்.பின்னா் அதிகாரிகள், நியமன பிரதிநிதிகள் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவா்கள் மனோகரன், சாந்தகுமாா், புளியறை கால்நடை மருத்துவா் சிவகுமாா் ஆகியோா் புலியின் உடலை கூறாய்வு செய்தனா். கூறாய்வுக்குப் பிறகு புலியின் உடல் நிகழ்விடத்திலேயே எரியூட்டப்பட்டது.ஆய்வின்போது, வனப் பாதுகாவலரும், கள இயக்குநருமான முருகன், மாவட்ட வன அலுவலா், உதவி வனப் பாதுகாவலா் நெல்லை நாயகம், வனசரக அலுவலா் யாசின் உள்ளிட்டோா் உடனிருந்தனா். வனத்துறையினா் வனக் குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.Image Caption~ ~