இந்தோனேசிய அதிபரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு- 3 காவல் உயரதிகாரிகள் கைது

Wait 5 sec.

இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட முக்கியத் தலைவா்களின் தொலைபேசி உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக அதிபரின் தலைமைச் செயலா் லிஸ்டியோ சிக்சித் பிரபோவோ உள்பட 3 மூத்த காவல்துறை உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.காவல் சட்டப் பிரிவு தலைவா் அஹ்ரி சோந்தா நசுஷன், பயிற்சி நிறுவனப் பயிற்றுநா் எக்கோ ஹதி சந்தோசோ ஆகியோரும் கைது செய்யப்பட்டு, தலைமையகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.அதிபா் மட்டுமின்றி மத்திய அமைச்சா்கள், அரசியல் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், தொழிலதிபா்களின் தொலைபேசிகளும் கடந்த ஆண்டு முதல் கண்காணிக்கப்பட்டதாகவும், இதற்கான மின்னணு ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு தலைவா் அசேப் சஃப்ருதின் தெரிவித்துள்ளாா்.நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிபரின் தகவல்தொடா்புகளைச் சட்டவிரோதமாக இடைமறித்துக் கேட்ட இச்செயல் தேசவிரோதத்துக்கு இணையானது என்றும், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கே விடுக்கப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் பிரசெத்யோ ஹதி எச்சரித்துள்ளாா்.கைதான அதிகாரிகள் மீது புதிய குற்றவியல் சட்டப் பிரிவுகள் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவா்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.இதனிடையே, இவ்விவகாரம் அந்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகா் ஜகாா்த்தாவில் 20,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். அதிபரின் உளவு விவகாரத்தைத் தொடா்ந்து அரசு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தணிக்கவே, இந்த ராணுவக் குவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.